உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற மூவரை அப்போலோவுக்கு மாற்ற வேண்டும்

துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற மூவரை அப்போலோவுக்கு மாற்ற வேண்டும்

மதுரை : பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமுற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மூவரை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் முருகன் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறானது. பலர் காயமுற்று ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். பகுஜன் சமாஜ் நிர்வாகி குருவிஜயனும் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்தார். ஏற்கனவே இவற்றை விசாரித்த ஐகோர்ட் கிளை, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள், முதன்மை செஷன்ஸ் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டது.நேற்று வழக்குகள் நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தன. மூன்று மாவட்ட கலெக்டர்கள், நீதிபதிகள் அறிக்கைகளை அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், கூடுதல் பிளீடர் முகமது மொய்தீன் தாக்கல் செய்தனர். அறிக்கையில், 'மதுரையில் 17, ராமநாதபுரத்தில் 6, சிவகங்கையில் 13, இளையான்குடியில் 2 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் மாணிக்கம், சிவா ஆகியோர் குண்டடி பட்டுள்ளனர். இவர்களை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது,' என குறிப்பிடப்பட்டது. மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ராமானுஜம், கண்காணிப்பாளர் பிரகதீஸ்வரன் ஆஜராகி, காயமுற்றோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விளக்கினர்.பின் நீதிபதிகள், ''காயமுற்றவர்களில் மாணிக்கம், சிவா, குமாரை அப்போலோ ஆஸ்பத்திரிக்கு மாற்றி சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு தொடர்ந்து அந்தந்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். மனுதாரர் வக்கீல் ரத்தினம், சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து, கோரிக்கை இருந்தால் தெரிவிக்கலாம்,''என்றனர். வழக்கை செப்., 19க்கு தள்ளிவைத்தனர்.மனுதாரர் வக்கீல் ரத்தினம், ''இறந்தவர்களின் பிரேத பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படவில்லை,'' என்றார். அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், ''சான்றிதழ்களை செப்., 19ல் ஐகோர்ட்டில் தாக்கல் செய்வதாக,'' குறிப்பிட்டார். அதன்படி சான்றிதழ்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை