மதுரை விரிவாக்க பகுதியில் அமைந்த உத்தங்குடி ஊராட்சியில் உத்தங்குடி, அம்பலக்காரன்பட்டி, இலந்தைக் குளம், உகலனேரி, மங்களகுடி குடியிருப்புகள் உள்ளன. மூவாயிரம் வீடுகள் உள்ளன. ஆறாயிம் பேர் வசிக்கின்றனர். ஊராட்சி பகுதியில் ஐகோர்ட் கிளை, ஐ.டி., பூங்கா உள்ளன. 420 தெருவிளக்குகள் உள்ளன. உள்ளாட்சிதேர்தலில் மாநகராட்சி யுடன் ஊராட்சி இணைகிறது.ஊராட்சியில் போதிய துப்புரவு ஊழியர்கள் இல்லாததால் உத்தங்குடி, உலகனேரியில்குப்பைகள் சரியாக அள்ளப்படாமல் தேங்கி கிடக்கின்றன. குப்பைகளை மேலூர் ரோடு அருகே போட்டு தீ வைத்துஎரிக்கின்றனர். இதனால் புகைமூட்டம் எழுகிறது. உத்தங்குடியில் பழைய பள்ளி கட்டடங்கள் மோசமாக இடியும் நிலையில் உள்ளன. இவற்றில் ஒரு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மற்றொரு கட்டடத்தில் செயல்பட்ட அங்கன்வாடி மையம் மோசமாக இருப்பதால், குழந்தைகள் நாடக மேடைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உலகனேரி வழியாக பெரியாறு பாசன கிளை கால்வாய் செல்கிறது. சில இடங்களில் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து இப்பகுதியினர் கருத்து:மாரிமுத்து, உத்தங்குடி: இங்கு அய்யனார் கோயில் தெப்பக்குளம்அருகில் கிணறு உள்ளது.மக்கள் இங்கு குடிநீர் எடுக்கின்றனர். கிணற்றின் நீர் ஆதாரமாக உள்ள தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள ஓடையில் இருந்துதண்ணீர் வருகிறது. ஓடை பல ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடை வழியாக தெப்பத்திற்குவருகிறது. இதனால் கிணற்று நீரின் தன்மை மாறி, குடிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.நீலமேகம், உலகனேரி: வளர்நகர் போன்ற பகுதிகளுக்கு செல்லும்ரோடு மிக மோசமாக உள்ளன. மேலூர் மெயின் ரோட்டில் குப்பைகளை கொட்டி, ஆங்காங்கே தீவைப்பதால், புகைமூட்டம்எழுகிறது. ரோடுகளில்வாகனங்கள் வருவதுதெரியாமல், விபத்துக்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு குடிநீர் போதியளவு சப்ளைசெய்யப்படாததால், பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
துணை தலைவர் ரவிச்சந்திரன்: ஐந்தாண்டுகளில் முடிந்தளவுக்கு தார் ரோடுகள், குடிநீர் மேல்நிலை தொட்டிகள், சிமென்ட் ரோடுகள், தெரு விளக்குகள் போட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஊராட்சி ஒன்றியம் மூலம் எம்.பி., நிதியில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. நாடகமேடை, கூடுதல் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் பற்றாக்குறைக்கு திருட்டு மோட்டார்கள் காரணம். இதை தடுக்க ஊராட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் சிலர் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர். பன்றிகளை மதுரையை சேர்ந்தவர்கள் கொண்டு வந்து விடுகின்றனர். குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால், ரோட்டோரங்களில் கொட்டி எரிக்கின்றனர். இதை தவிர்க்க மாற்று இடம் ஒதுக்கி தர மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது. மாற்று இடம் கிடைத்ததும், அங்கு குப்பைகள் கொட்டப்படும்.
நல்லாட்சி தந்ததா உள்ளாட்சி
சட்டசபை தேர்தல்கள் முடிந்து புதிய ஆட்சி அமைந்த நிலையில், அடுத்த எதிர்பார்ப்பு உள்ளாட்சிதேர்தல்கள். உள்ளாட்சிகள் நல்லாட்சியை தந்து விட்டால், மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். கிராமங்களின் வளர்ச்சியை பொறுத்தே நாட்டின் வளர்ச்சி அமையும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் உள்ளாட்சிகளை ஆட்சி செய்தவர்கள், என்னென்ன பணிகளை நிறைவேற்றினர்? அரசு ஒதுக்கிய பணம் முறையாக சென்று சேர்ந்ததா? உள்ளாட்சிகள் தன்னிறைவு பெற்றுள்ளனவா? உள்ளாட்சிகள் நல்லாட்சி தந்தனவா என்பதை அலசி ஆராயும் பகுதி இது.