உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் மகளிர் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மகளிர் போஸ் கொடுத்தது போதும் என கூறியதால் ஆவேசம் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு

மதுரையில் மகளிர் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மகளிர் போஸ் கொடுத்தது போதும் என கூறியதால் ஆவேசம் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு

மதுரை: 'போக்சோ' வழக்கில் பள்ளி ஆசிரியரை கைது செய்யக்கோரி மதுரை நகர் மகளிர் ஸ்டேஷனை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தது போதும் என போலீஸ் கிண்டலாக கூறியதால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரை வசந்தநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் ஜெயராம், உடந்தையாக இருந்ததாக தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியை மீது நவ.5 ல் 'போக்சோ' சட்டத்தின்கீழ் திலகர்திடல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யக்கோரி நேற்று மதுரை தெற்குவெளிவீதியில் உள்ள தெற்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட போவதாக அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்தனர். நேற்று காலை ஸ்டேஷன் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். இ.ஜ.வா.ச., மாவட்ட செயலாளர் வேலுதேவா தலைமையில் 10 இளைஞர்கள் வந்தனர். போலீசார் அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அடுத்த கட்டடமான நகர் மகளிர் ஸ்டேஷனிற்குள் மற்றொரு வழியாக வந்து பொன்னுத்தாய் தலைமையிலான மாதர் சங்கத்தினர் நுழைந்தனர். ஸ்டேஷன் கேட் அடைக்கப்பட்டதை தொடர்ந்து வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உதவிகமிஷனர் முத்துக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மாதர் சங்கத்தினர் வெளியேற மறுத்தனர். 'டென்ஷனான' போலீசார், 'போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தது போதும். எந்திரிங்க' என்றுக்கூற, ஆத்திரமுற்ற பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 14 பெண்கள் உட்பட 24 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை