முதிர்வுத்தொகை விரைவில் பட்டுவாடா எம்.டி.சி.சி., வங்கி நிர்வாக இயக்குநர் உறுதி
மதுரை: 'ஒத்தக்கடை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் டெபாசிட் செய்தவர்களின் முதிர்வுத்தொகை விரைவில் பட்டுவாடா செய்யப்படும்' என மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தில் 174 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு பயிர்க்கடன், கறவை மாடு பராமரிப்புக்கடன், நகைக்கடன் உட்பட பல்வேறு கடன்கள் வழங்குகின்றனர். சங்கத்தில் உள்ள 150 உறுப்பினர்கள் ரூ.5 கோடி வரை 'பிக்சட் டெபாசிட்' செய்துள்ளனர். ஓராண்டு 'பிக்சட் டெபாசிட்' காலம் முடிந்ததும் முதிர்வுத்தொகை வழங்க வேண்டும். ஆனால் பிப்ரவரியில் முதிர்வடைந்த டெபாசிட்களுக்கு தற்போது வரை தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதுகுறித்து ஜூன் 29 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறார் நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன். அவர் கூறியதாவது: 134 உறுப்பினர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்க வேண்டியுள்ளது. பயிர்க்கடன் உட்பட பல்வேறு கடன் வாங்கியவர்கள் தொகையை திரும்ப செலுத்தாத நிலையில் முதிர்வுத்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து சென்னை அதிகாரிகளுடன் பேசிய நிலையில் அத்தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 முதல் 25 நாட்களுக்குள் டெபாசிட்தாரர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்கப்படும் என்றார்.