உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீளா பிரச்னைகளுடன் தவிக்கும் மீனாட்சிபுரம்

மீளா பிரச்னைகளுடன் தவிக்கும் மீனாட்சிபுரம்

மதுரை : மதுரை 24வது வார்டில் மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி மெயின்ரோடு, பூந்தமல்லி மெயின் ரோடு, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மெயின் உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நீண்ட நாட்கள் பிரச்னை பலவும் தீர்க்கப்படாமல் உள்ளதால் மீளாத்துயரில் தவிக்கின்றனர்.

ரேஷன் கடை வேண்டும்

சங்கரலைன் பகுதி ராஜா சந்திரசேகரன்: தொலைவில் உள்ள ரேஷன் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. சத்தியமூர்த்தி நகர் மற்றும் அருகில் வசிப்போருக்கும் ஒரே கடையில் அதிக கார்டுகள் உள்ளன. செல்லுார் அரிசன கூட்டுறவு சங்கம் சார்பில் அனுமந்த பட்டா வழங்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளாக போராடியும் உரிய பட்டா கிடைக்கவில்லை. புதிதாக கட்டப்படும் சுகாதார மையத்திற்காக சங்கர லைன் - பூந்தமல்லி இடையே 5 மீட்டர் அகல பாலம் இருந்தால் கடந்து செல்ல எளிதாக இருக்கும். குலமங்கலம் ரோட்டில் மீண்டும் சிட்டிபஸ் வசதி வேண்டும். வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூந்தமல்லி குறுக்கு தெரு, முனியாண்டி தெரு, பள்ளிவாசல் தெரு பகுதிகளில் சீரற்ற ரோடுகளால் வாகனங்கள் செல்ல இடையூறு இருக்கிறது.

பாலம் சீரமைக்க வேண்டும்

சத்தியமூர்த்தி தெரு கலையரசி: வைகை ஆற்றை இணைக்கும் பந்தல்குடி கால்வாய் முழுவதும் குப்பையால் நிரம்பியுள்ளது. சில வீடுகளின் பைப் லைனை நேரடியாக ஓடையில் இணைத்துள்ளனர். அவற்றை அகற்ற வேண்டும். மீனாம்பாள்புரத்தை இணைக்கும் பாலம் தினமும் காலை குப்பையால் நிரம்பி விடும். அருகில் வசிப்போருக்கு கொசுத்தொல்லை, நோய்த்தொற்று அபாயம் உள்ளது. பாலத்தில் சிறிய வாகனம் சென்றாலும் அதிர்வு ஏற்படுகிறது. பாலத்தின் அடியில் சிமென்ட்கள் உதிர்ந்து கம்பிகள் தெரிகின்றன. குப்பையை இங்கே கொட்டியதால் ஈரப்பதம் அதிகரித்து பாலம் வலுவின்றி உள்ளது. குழந்தைகள் அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்கு செல்கின்றனர். அங்கே வகுப்பறை குறைவாக உள்ளதால் புதிதாக கட்ட வேண்டும்.

திட்டத்திற்கு ஒப்புதல் தேவை

மாணிக்கம், கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : ரூ. 2 கோடி செலவில் 40 ரோடுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அம்ரூத் திட்டத்தில் மோட்டர் வைக்கும் பணி நடக்கிறது. இத்திட்டம் முழுமையடைந்ததும் விடுபட்ட ரோடுகள் அமைக்கப்படும். பாலத்தில் சாமி படங்கள் வைத்தும் குப்பைக்கு தீர்வு கிடைக்கவில்லை. பாலத்தை பராமரிக்க ரூ. 75 கோடிக்கு எம்.எல்.ஏ., திட்டம் அனுப்பியுள்ளார். மக்களின் பாதுகாப்பு கருதி விரைந்து அனுமதி வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் வசதி முழுமை பெறவேண்டும். கொசு மருந்து வண்டியை 21 வார்டுகளுக்கு ஒரு வண்டி என்ற கணக்கில் சுழற்சி முறையில் கொடுக்கின்றனர். 2 வண்டியாவது வேண்டும். பஸ் வசதி வேண்டி மனு அளிக்கவுள்ளேன். பூமி உருண்டை தெருவில் பகுதிநேர ரேஷன் கடை அமைத்தும், செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. 1500 கார்டுகள் இருப்பதால் கூடுதலாக ஒரு முழுநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !