உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை செல்லுாரில் அமைகிறது மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்  ஓடி விளையாடு... மாநகராட்சி, ஒலிம்பிக் சங்கம் சார்பில் பணிகள் துவங்கியாச்சு

மதுரை செல்லுாரில் அமைகிறது மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்  ஓடி விளையாடு... மாநகராட்சி, ஒலிம்பிக் சங்கம் சார்பில் பணிகள் துவங்கியாச்சு

மதுரை, மதுரையில் மாநகராட்சி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் இணைந்து செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு கபடி சிலை ரவுண்டானா அருகே 'மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்' அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மதுரை நகரில் மக்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், இளைஞர்கள் 'பிட்னஸ்'க்கான பொது உடற்பயிற்சி மையங்கள் என எதுவும் இல்லை. மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களில் இதுகுறித்து அ.தி.மு.க., தி.மு.க., காங்., கம்யூ., கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்தனர். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, '29வது வார்டு கபடி சிலை அருகே மாநகராட்சிக்கு இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதை மீட்டு அந்த இடத்தில் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 'இன்டோர் ஸ்டேடியம்' ஏற்படுத்த வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்தார். இதன் தொடர்ச்சியாக கமிஷனர் சித்ரா முயற்சியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, 75 சென்ட் இடம் மீட்கப்பட்டது. அங்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து 'மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்' ஆக மாற்றுவதற்கான பணிகளை மாநகராட்சி துவக்கியுள்ளது. சோலைராஜா கூறியதாவது: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க சீனியர் துணைத் தலைவராகவும் உள்ளேன். செல்லுார் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். அப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்தால் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் சம்பந்தப்பட்ட இடம் குறித்து மாநகராட்சி கவனத்திற்கு கொண்டுசென்றோம். இதற்கு கவுன்சிலர்கள் லோகமணி (தி.மு.க.,), முருகன் (காங்.,), குமரவேல் (மா. கம்யூ.,) உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளித்தனர். முக்கியத்துவம் அறிந்து கமிஷனரும் துரித நடவடிக்கை எடுத்ததால் மாநகராட்சி, ஒலிம்பிக் சங்கம் இணைந்து தனியார் பங்களிப்பு மூலம் ரூ.50 லட்சத்தில் இந்த விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த உள்ளோம். முதற்கட்டமாக ரூ.5 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. வாலிபால், இறகுபந்து, கிரிக்கெட் (நெட் பயிற்சி), கோ கோ, சிலம்பம், கபடி விளையாட்டுக்கான கட்டமைப்பு, பிரத்யேக ஜிம், நடைப்பயிற்சிக்கான டிராக் ஆகியன ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை சுற்றியுள்ள பள்ளி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ