வரலாற்றையே மாற்றிய கீழடி ஆய்வு அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
திருப்பரங்குன்றம்: இந்தியாவின் மிகப் பழமையான, சிறப்புமிக்க மாநகரங்களில் மதுரையும் ஒன்று என அமைச்சர் மூர்த்தி பேசினார்.மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்நாடு வரலாற்று பேரவை மாநாடு நேற்று துவங்கியது. கல்லுாரிச் செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார்.இதில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ''இந்தியாவின் பழமை நகரான மதுரையை ஆண்ட மூவேந்தர்களும் இலக்கியம், வணிகம், கட்டடக் கலைகளில் சிறந்து விளங்கினர். தமிழர்கள் வணிகரீதியாக அயல்நாடுகளுடன் வாணிபம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் உலக கட்டடக்கலைக்கு ஒப்பானது. இந்தப் பணிகளுக்கு நாயக்க மன்னர்கள் பெரியளவில் உதவியுள்ளனர். கீழடி ஆய்வு உலக வரலாற்றையே மாற்றி அமைத்துள்ளது. கீழடி சங்க காலத்திலேயே நகர்புற அமைப்பைக் கொண்டுள்ளது என்றார். மாநாட்டு மலரை அமைச்சர் மூர்த்தி வெளியிட, தளபதி எம்.எல்.ஏ., பெற்றார்.ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி முன்னாள் முதல்வர் வெங்கடராமன் மாநாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்றார். சென்னை விவேகானந்தா கல்லுாரி முன்னாள் பேராசிரியர் கருணானந்தனுக்கு சிறந்த வரலாற்று ஆய்வாளர் விருது வழங்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் உட்பட இலங்கை, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பையில் இருந்து ஆய்வு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர்பங்கேற்றனர். 500 பேர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை அமைப்புச் செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார். இன்றும் மாநாடு நடக்கிறது.