குவாரி வாகனத்தால் புதிய ரோடு சேதம்
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் குவாரி வேலைக்கு வந்த இயந்திர வாகனத்தால் புதிய தார் ரோடு சேதப்படுத்தப்பட்டது.இப்பகுதி ஆண்டிபட்டி பங்களா நான்கு வழிச்சாலை பிரிவு முதல் கச்சைகட்டி வரை 3 கி.மீ., ரோட்டில் உள்ள 10 கிரஷர் மற்றும் குவாரி லாரிகள் தினமும் அதிக எடையுடன் செல்கின்றன. இதனால் பழுதடைந்து பயணிக்க தகுதியற்ற நிலையில் இருந்தது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலை துறையினர் கடந்த வாரம் சாலை பணிகளை மேற்கொண்டனர்.சமூக ஆர்வலர் ஞானசேகரன்: கிராமப்புற சாலை குவாரி லாரிகளால் முன்னதாகவே சேதமடைந்தது. சாலை அமைக்க தொடர்ந்து மனு அளித்தேன். தற்போது ரூ.1.75 கோடியில் குடிநீர் குழாய் பதிக்கும் பகுதி தவிர்த்து சாலை அமைத்துள்ளனர். வகுத்துமலை ஓடை பாலம் அருகே குவாரி பணிக்கு கொண்டு வந்த இரும்பு சக்கர இயந்திரத்தை லாரியில் இருந்து இறக்கும்போது புதிய தார் ரோடு சேதமடைந்தது. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.