மதுரை,: கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசியல்வாதிகளால் மிரட்டி, பறிக்கப்பட்ட நிலங்களை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க, நில மோசடி குறித்த போலீஸ் சிறப்பு பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நகரில் 7 புகார்கள் பெறப்பட்டு விசாரணையில் இருக்கிறது. போலி ஆவணம் தயாரித்து நிலத்தை கைப்பற்றுதல், 'பவர்' ஏஜென்ட் எனக்கூறி நிலங்களை விற்று மோசடி செய்தல் போன்ற குற்றங்களை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வழக்குப்பதிவு செய்வது நீண்டகாலமாக உள்ளது. அதேசமயம், பொய் புகார் குறித்து போலீசார் கண்டுகொள்வது இல்லை. எப்படியாவது வழக்குப்பதிய வேண்டும் எனக்கருதி, புகார்தாரர் கோர்ட் மூலம் உத்தரவு பெற்று வழக்குப்பதிவு செய்ய வைக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படி பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 57.கடந்த ஆட்சியில் அரசியல் தலையீட்டால் புகார் கொடுக்க தயங்கிய பலர், தற்போது நிலமோசடி பிரிவுக்கு படையெடுக்கின்றனர். இதுவரை புகார் கொடுத்த பலர், மோசடி செய்தவர் ஜாமீனில் எளிதில் வந்துவிடக்கூடாது என்பதற்காக, 'கொலை மிரட்டல் விடுத்தார், தாக்கினார்' என, ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வைக்கின்றனர். அதே சமயம், பாகப்பிரிவினை செய்யாத குடும்ப சொத்தை, தன்னிச்சையாக விற்ற சகோதரர் மீதோ, சகோதரி மீதோ புகார் செய்வதும் அதிகரிக்கிறது. ஒருவர் ஆக்கிரமித்துள்ள இடத்தை இன்னொருவர், வேண்டிய அரசியல்வாதிகளின் 'ஆசியுடன்' ஆக்கிரமித்தது குறித்த புகார்களும் வருகின்றன. வைகையாற்றின் அருகே மாநகராட்சி இடத்தை மண்டல தலைவர் ஒருவரின் ஆதரவுடன் தி.மு.க.,வினர் ஆக்கிரமித்ததாக மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஆக்கிரமிப்புதானா?, அதற்கு பட்டா உண்டா? என கேள்வி கேட்டு மாநகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.போலீசார் கூறியதாவது :நகரில் நிலமோசடி தடுப்பு பிரிவில் எந்த வழக்கும் பதிவாகவில்லை. புறநகரில்தான் நிலமோசடி அதிகம் நடந்துள்ளதால், அங்கே புகார்கள் குவிகின்றன. பொதுவாக போலி ஆவணங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்கிறோம். நகரில் நிலங்கள் இல்லை என்றாலும், விலை மதிப்புள்ள கட்டடங்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்குவது, ரூ.ஒரு கோடிக்கு மேல் சொத்து வாங்கினால், அரசியல்வாதிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் கமிஷன் கொடுக்க வைத்தது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் கொடுக்க வராதது ஆச்சரியமளிக்கிறது, என்றனர்.