கிளி போல கோலம் ஒண்ணு… மயில் போல கோலம் ஒண்ணு: தினமலர் போட்டியில் மங்கையரின் மனங்கவர்ந்த கோலங்கள்
மதுரை: தினமலர், போத்தீஸ், ஸ்ரீ ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் (பி) லிட் சார்பில் மதுரை அரசரடி யு.சி., பள்ளி மைதானத்தில் நடந்த கோலப்போட்டியில் மங்கையர் வரைந்த கோலங்கள் மைதானத்தை வண்ணங்களால் நிறைத்து பளிச்சிட செய்தது.ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பெண்கள் காலை 7:00 மணிக்கே மைதானத்திற்கு வர ஆரம்பித்தனர். ஒன்பது மணி வரை பதிவுகள் சரிபார்க்கப்பட்டு கோலப்போட்டி துவங்கியது. ஒரு மணி நேரம் நடந்த போட்டியில் நடுவர்கள் ஆர்த்தி, ஜெய்னுல் பாத்திமா, கவிதா, சந்தோஷிமா, கீர்த்திகா, கவுசல்யா, சுபாஷினி, அக் ஷயா, ஸ்ரீகலா, பாக்கியலட்சுமி, சரோஜினி ஆகியோர் தினமலர் வாசகியரின் கோலங்களை மதிப்பிட்டனர். வகைகளும் வண்ணங்களும்
பறவைகளை எடுத்துக் கொண்டால் கிளி, மயில், சிட்டுக்குருவிகள் கோலத்தில் உலவின. மான்களும், மீன்களும் வண்ணங்களில் ஜொலித்தன. இயற்கை காட்சிகள், உழவு காட்சி, சமூக அக்கறையுடன் பெண் கல்வியின் முக்கியத்துவம், தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கோலங்களையும் வரைந்திருந்தனர். தரையில் மட்டுமின்றி, அருகிலேயே தாம்பாளத்தில் தண்ணீர் நிரப்பி அதிலும் கோலம் வரைந்து அசத்தினர் சிலர். கனவுப் பெண்கள்
இந்தாண்டு புதுவரவாய் கிருஷ்ணரை கனவில் நினைக்கும் ஆண்டாள் வடிவ கோலங்கள் புதுமை சேர்த்தன. பூக்கோலத்திலும் வண்ணங்களின் சேர்க்கையில் புதுப்பொலிவு தந்தனர். முப்பரிமாண கோலங்கள், வட்டம், டைமண்ட் வடிவ கோலங்களும் அழகுசேர்த்தன. புள்ளி கோலங்கள், வளைவு கோலங்கள் வண்ணம் பூசி வலிமை காட்டின. அர்த்தநாரீஸ்வரர், சிவன், பார்வதி, ஆண்டாள், மீனாட்சி, லிங்கேஸ்வரர், விநாயகர், முருகன் சுவாமி உருவங்களை தத்ரூபமாக வரைந்து அழகுசேர்த்தனர்.புள்ளிக்கோலம் வரைந்து புதுவண்ணமிட்ட மதுரை ஆனையூர் உஷாராணிக்கு முதல் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டது. அவனியாபுரம் சுஷ்மிதா ஸ்ரீக்கு 2ம் பரிசாக வாஷிங் மெஷின், மீனாட்சிநகர் சுந்தரிக்கு 3ம் பரிசாக டிவி, திருச்சி பிரியாவுக்கு 4ம் பரிசாக கிரைண்டர், கோரிப்பாளையம் மைதிலிக்கு 5ம் பரிசாக மிக்சி வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக 50 பேருக்கு குக்கர்கள் வழங்கப்பட்டன.மதுரை பாண்டியன் அப்பளம், மனோ புக் சென்டர், எஸ்.வி.எஸ்.கடலைமாவு, ஆனந்தா அண்ட் ஆனந்தா, மில்கா வொண்டர் கேக், நவீன் மசாலா இணைந்து வழங்கின. பவர்டு பை சத்யா.மனோ புக் சென்டர் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார், ஸ்ரீ ஜெயபிரபா ஜூவல்லர்ஸ் இயக்குநர் தனசேகரன், பாண்டியன் அப்பளம் உரிமையாளர் திருமுருகன், சத்யா ஏஜன்சீஸ் பொது மேலாளர் வில்சன், ஆனந்தா அண்ட் ஆனந்தா நிர்வாக இயக்குநர் சுந்தரலிங்கம், மேலாளர் உஷா பரிசுகளை வழங்கினர். எஸ்.எஸ்.காலனி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். தேவகி மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தது. கோலப்போட்டிக்கான மைதானத்தை யு.சி.பள்ளி தலைமையாசிரியர் பாபுசாமி கமலாகரன் வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கூறியது
முதன்முறை முதல்பரிசு
ஆண்டுதோறும் தினமலர் நடத்தும் கோலப்போட்டியில் ரங்கோலி வரைந்து ஆறுதல் பரிசு பெற்றுள்ளேன். முதன்முறையாக இந்தாண்டு பாரம்பரிய புள்ளிக்கோலம் வரைந்தேன். அதில் கட்டங்களை நிரப்பும் இடங்களில் சரியான வண்ணத்தில் கோலப்பொடி தேர்வு செய்தேன். புள்ளிகளால் ஆன வளைவும் வண்ணமும் மிகச்சிறப்பாக அமைந்ததற்காக முதல் பரிசு கிடைத்தது.உஷாராணி, ஆனையூர்அன்னை மீனாட்சி தந்த பரிசு:
மீனாட்சி திருக்கல்யாண கோலக் காட்சியை வரைந்தேன். அண்ணன் கள்ளழகரை விட்டு பிரிந்து சிவபெருமானுடன் அன்னை மீனாட்சி செல்லும் காட்சியை வரைந்தேன். வண்ணங்களின் சேர்க்கையும் வடிவும் 2ம் பரிசாக வாஷிங்மெஷினைப் பெற்றுத் தந்தது.சுஷ்மிதா ஸ்ரீ, அவனியாபுரம்பெண்கல்வி கொடுத்த செல்வம்
ஒரு பெண்ணுக்கு கல்வி இருந்தால் எல்லா தடைகளையும் உடைத்து எறிந்து முன்னேறி வருவாள். ஒருபெண்ணாக மற்ற பெண்களுக்கு இதை விழிப்புணர்வு கோலமாக வரைந்து உணர்த்தினேன். என் முயற்சிக்கு மூன்றாம் பரிசாக டிவி கிடைத்தது.சுந்தரி, மீனாட்சிநகர்திருச்சியில் இருந்து தேடி வந்தது
நான் திருச்சியில் உள்ளேன். கோலப்போட்டியில் கலந்து கொள்வதற்காக அலங்காநல்லுாரில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தேன். மயில் கோலம் வரைந்து பூக்களை அடுக்கடுக்காக தொடுப்பது போல வரைந்து வண்ணமிட்டேன். திருச்சியில் இருந்து போட்டிக்காக வந்தது வீண்போகவில்லை. நான்காம் பரிசாக கிரைண்டர் கிடைத்தது சந்தோஷம்.ப்ரியா, திருச்சிதினமலர் நாளிதழுக்கு நன்றி:
பொங்கல் பானையில் கிளிகள் வரைந்ததற்கு 5வது பரிசு கிடைத்தது. மூன்று நாட்கள் இந்த கோலம் வரைந்து பயிற்சி பெற்றேன். அதனால் மைதானத்தில் எளிதாக வரைந்து வண்ணம் பூசினேன். பெண்களை எப்போதும் முன்னேற்றி அழகுபார்க்கும் தினமலர் நாளிதழுக்கு நன்றி. மைதிலி, கோரிப்பாளையம்