மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆரோடு ஒப்பிட என்ன தகுதி உள்ளது?
31-Aug-2025
மதுரை: த.வெ.க., தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் எம்.ஜி.ஆர்., படம் இடம் பெற்றிருப்பது குறித்த கேள்விக்கு 'எம்.ஜி.ஆரை வைத்து விஜய் படம்தான் காட்ட முடியும்' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கிண்டலாக கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: நான் அமைச்சராக இருக்கும்போது என் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்தேன். ஆனால் தி.மு.க., அமைச்சர் மூர்த்தி, டிபன் பாக்ஸ் கொடுத்து வருகிறார். மதுரையில் உள்ள இரு அமைச்சர்களும் திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மதுரை மாநகராட்சியில் புதிதாக மண்டல தலைவர் பதவிக்கு வருபவர்கள் மக்கள் பணத்தை சூறையாடாமல் இருந்தால் சரி. இதற்கு முன் இருந்தவர்கள் ரூ.250 கோடியை 'சுவாகா' செய்து விட்டார்கள். இவ்வாறு கூறியவரிடம், விஜய் பிரசார வாகனத்தில் எம்.ஜி.ஆர்., படம் உள்ளது குறித்து கேட்டதற்கு, 'எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சி அ.தி.மு.க., விஜய்யினால் படம்தான் காட்ட முடியும். புயல் மையம் கொண்டுள்ளது போல் பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் மையம் கொண்டுள்ளனர். ஆட்சியில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள். பழனிசாமி பொதுச் செயலாளராக இருக்கும் வரை தி.மு.க.,வுக்கு வெற்றி எளிது என்று யாரோ தப்பா எழுதிக்கொடுத்ததை உதயநிதி பேசியுள்ளார். இவ்வாறு கூறினார்.
31-Aug-2025