நுாறுநாள் வேலைத்திட்டத்தில் தகுதியற்ற கணினி உதவியாளர்களை நீக்க உத்தரவு அவுட்சோர்ஸிங் முறையில் தேர்வானவர்கள்
மதுரை : நுாறு நாள் வேலைத்திட்டப்பணிக்காக அவுட்சோர்ஸிங் முறையில் நியமிக்கப்பட்ட தகுதியில்லாத கணினி உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு நுாறு நாட்கள் வேலையளித்து அங்குள்ள கண்மாய் சீரமைப்பு, துார்வாருதல், ரோடு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தகுதியற்றவர்கள்
இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றியங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கணினி உதவியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இத்திட்டப்பணிகள் தடையின்றி நடைபெற ஒப்பளிக்கப்பட்ட (அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின்) எண்ணிக்கையில் அவுட்சோர்ஸிங் மூலமும் ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதில் அவுட்சோர்ஸிங் மூலம் நியமிக்கப்பட்ட கணினி உதவியாளர்களில் பலர் கல்வித்தகுதி, கணினி இயக்குவதில் போதிய அனுபவமும் இல்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு பெற்ற அறிக்கை மூலம் இது தெரிய வந்தது. பணிநீக்க உத்தரவு
கணினி அறிவியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களையே அவுட்சோர்ஸிங் மூலம் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கல்வித்தகுதி இல்லாமல் கணினி உதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தால் அவர்களை நீக்கம் செய்துவிட்டு, அரசு விதிகளின்படி கல்வித்தகுதி உள்ளவர்களை ஈடுபடுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட கணினி உதவியாளர் பணியிடங்களுக்கு மேல் ஆட்களை நியமிக்கக் கூடாது. அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதியத்தைவிட (ரூ.20 ஆயிரம்) கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கக் கூடாது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோரை மாவட்டங்களுக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும். அவர்களின் பணிகள் தவிர பிற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது,' என, ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் பொன்னையா கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.