உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அரசு பொதுத்துறை நிறுவனப் பணிகள் ஆப்பு வைக்கும் அவுட்சோர்ஸிங் முறை த.வெ.க., ஆட்சியில் தீர்வு எதிர்பார்ப்பு

 அரசு பொதுத்துறை நிறுவனப் பணிகள் ஆப்பு வைக்கும் அவுட்சோர்ஸிங் முறை த.வெ.க., ஆட்சியில் தீர்வு எதிர்பார்ப்பு

மதுரை:தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் (கழகம்/வாரியங்கள்) இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கும் வகையில் 'அவுட்சோர்ஸிங்' முறையில் உள்ள ஆயிரக்கணக்கான பணிகளை ரத்து செய்து புதிய நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநில அளவில் மின்வாரியம், ரப்பர், அரசு சிமென்ட், தொழில் மேம்பாட்டுக் கழகம் (டிக்), சிப்காட், டான்சி உட்பட 40க்கும் மேற்பட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தரமாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 'அவுட் சோர்ஸிங்' முறையிலும் பணியில் உள்ளனர். 'டிக்' போன்ற நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரி, பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட இடங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு அதிக சம்பளத்தில் பணிநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்களில் 'அவுட் சோர்ஸிங்' மூலம் குறைந்த சம்ளபத்தில் தற்காலிகமாக பணிநியமனம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வழக்கமான வேலைவாய்ப்புகள் மேற்கொள்ளப்படாமல் இளைஞர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த திராவிட கட்சிகள் ஆட்சியில் தொடர்ந்த இந்த நிலைமை தற்போது அமைந்துள்ள த.வெ.க., ஆட்சியிலாவது மாறவேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அ.தி.மு.க., -தி.மு.க., ஆட்சியில் இந்த 'அவுட் சோர்ஸிங்' முறை மூலம் அரசு பணிகளை ஒழித்துக்கட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டன. இரண்டு ஆட்சியிலும் தனியார் நிறுவனங்களே ரூ.பல கோடிகளை சுருட்டி பயன் பெற்றன. அதேநேரம் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 'அவுட்சோர்ஸிங்' நியமனங்கள் மூலம் ஓய்வுபெற்றோர் தனி ராஜாங்கம் நடத்து கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 12 லட்சம் பணியிடங்களில் 4 லட்சத்திற்கும் மேல் தற்போது காலியாக உள்ளன. குருப் 'சி' மற்றும் 'டி' பிரிவில் மட்டுமே 70 சதவீதம் பணியிடங்கள் உள்ளன. இப்பிரிவில் வரைமுறையின்றி ஓய்வு பெற்றவர்களும், 'அவுட் சோர்ஸிங்' முறையிலும் பணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தி.மு.க., ஆட்சியில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் அறிவிக்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. இதனால் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. அதேநேரம் கடந்த காலங்களில் இரண்டு ஆண்டுகள் தற்காலிகமாக பணியாற்றியோர் நிரந்தரமாக்கப்பட்டனர். ஆனால் தி.மு.க., ஆட்சியில் ஒருவர் கூட நிரந்தரமாக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 ஆக தொடர வேண்டும். அப்போது தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கைகூடும். இப்பிரச்னையை முதல்வர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இந்த ஆட்சியிலாவது தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை