உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ஒரே காரில் பயணித்த பன்னீர்செல்வம் - செங்கோட்டையன் * புதிய கட்சி ஆரம்பித்து விஜயுடன் கூட்டணி அமைக்க திட்டம்

மதுரையில் ஒரே காரில் பயணித்த பன்னீர்செல்வம் - செங்கோட்டையன் * புதிய கட்சி ஆரம்பித்து விஜயுடன் கூட்டணி அமைக்க திட்டம்

மதுரை: அ.தி.மு.க.,வில் பழனிசாமி தலைமையை எதிர்த்து போராடி வரும் பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் மதுரையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரே காரில் பசும்பொன் கிராமத்திற்கு சென்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் பன்னீர்செல்வம் தலைமையில் புதிய கட்சி துவங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளதால், பழனிசாமி தரப்பு கலக்கத்தில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.,வை பழனிசாமியும், பன்னீர்செல்வமும் வழிநடத்தினர். ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். மீண்டும் இணைய முயற்சித்து வரும் நிலையில் பழனிசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். பா.ஜ.,வும் கண்டுக்கொள்ளாத நிலையில், அரசியலில் 'திரிசங்கு' நிலைக்கு பன்னீர்செல்வம் ஆளானார். விஜய் தலைமையில் கூட்டணி இந்நிலையில் 'பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முடியும்' என செங்கோட்டையன் பழனிசாமிக்கு எதிராக திடீர் போர்க்கொடி துாக்க, அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. 'பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவேன்' என செங்கோட்டையன் கூறிவந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மதுரை வந்தார். தனியார் ஓட்டலில் அவரும், பன்னீர்செல்வமும் சந்தித்தனர். 'தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து பழனிசாமியை எதிர்த்தால் அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். புதுக்கட்சி ஆரம்பித்தால் பலரும் அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து வருவார்கள். விஜய் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என விவாதித்தனர். இதுகுறித்து தினகரனுக்கும், சசிகலாவுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். 'தேவர் ஜெயந்தியன்று இதை மக்களுக்கு அறிவிப்போம்' என முடிவு செய்து, நேற்று காலை ஓட்டலில் இருந்து ஒரே காரில் பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பசும்பொன்னிற்கு புறப்பட்டனர். இது நல்ல முயற்சி பசும்பொன் அருகில் நெடுங்குளம் கிராமம் அருகே இருவரும் காத்திருந்து தினகரனை வரவேற்றனர். போக்குவரத்து நெரிசலில் சசிகலாவை அவர்களால் வரவேற்க முடியவில்லை. இதனால் பசும்பொன்னில் தேவருக்கு மரியாதை செலுத்திவிட்டு சசிகலா தவிர மூவரும் இணைந்து பிரஸ்மீட் கொடுத்தனர். பின்னர் பசும்பொன்னில் காத்திருந்து சசிகலாவை சந்தித்தனர். 'இது நல்ல முயற்சி. இதை தொடர்வோம்' என சசிகலா பச்சைக்கொடி காட்டினார். பின்னர் பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் மதுரை கப்பலுாருக்கு வந்து ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டு தனித்தனியே புறப்பட்டனர். அவர்கள் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு, இந்த ஓட்டலில் பிரஸ்மீட் கொடுத்த பழனிசாமி 'தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தி.மு.க.,வின் 'பி' டீம்' என குறிப்பிட்டார். இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''எங்களை 'பி' டீம் என சொல்லும் பழனிசாமி, தி.மு.க.,வின் 'ஏ1 டீம்' ஆக உள்ளார். முதல்வர் ஸ்டாலின் நிழலில் இருந்து வருகிறார் '' என்றார். இதற்கிடையே தேர்தல் நெருங்குவதால் பன்னீர்செல்வம் புதுக்கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டு, தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். 'கூட்டணி குறித்து த.வெ.க.,வுடன் நாங்களும் பேசவில்லை, அவர்களும் பேசவில்லை' என பழனிசாமியும், 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது' என த.வெ.க., இணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமாரும் கூறியநிலையில் தினகரன், பன்னீர்செல்வம் - செங்கோட்டையன் ஆகியோர் சசிகலா வழிகாட்டுதல்படி விஜய் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. காட்சி மாற்றம் // ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் ஆரம்பித்து பதவியை இழந்தார். சசிகலா சிறை சென்ற பிறகு அ.தி.மு.க.,வில் காட்சிகள் மாறின. பழனிசாமியின் ஆளுமைக்கும், அதிகாரத்திற்கும் ஈடுகொடுக்க முடியாத பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். யாருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினாரோ அவரிடமே தற்போது தஞ்சம் அடைந்துவிட்டதாக பழனிசாமி தரப்பினர் பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி