கோமதிபுரம் மக்களுக்கு நிம்மதி போச்சாம்
மதுரை: மதுரை மேலமடை அருகில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் ஒரு மாத காலமாக போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர். மேலமடை செல்வோர் கோமதிபுரம், மருதுபாண்டியர் தெரு வழியாக செல்கின்றனர்.குறுகலான தெருக்கள் வழியாக புழுதியை கிளப்பியபடி வாகனங்கள் செல்வதால், அப்பகுதியில் வசிப்போர்போக்குவரத்து நெரிசல், காற்று, புகை மாசுபாடாலும் அவதிக்குள்ளாகின்றனர்.கோமதிபுரத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன், பெரியார்பஸ் ஸ்டாண்ட், அண்ணா நகர் செல்ல பஸ் வசதி கிடையாது. கால் டாக்ஸி, ஆட்டோ மூலம் மட்டுமே செல்ல முடியும். போக்குவரத்து மாற்றத்தால் அவர்களும் வர மறுக்கின்றனர். வற்புறுத்தி வந்தாலும் வழக்கத்திற்கும் மேலாக சில நுாறு ரூபாய்களை கேட்கின்றனர். கோமதிபுரம் பகுதியில் ரோடுகள் மேடு, பள்ளமாக, சீரற்று இருப்பதால் வாகனங்களும்,ஓட்டுனர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.''குடியிருப்போர் வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதே அதிக நெரிசல் ஏற்பட காரணமாக உள்ளது. இதுபெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என சிலர் கூறுவதாக'' சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையத்தினர் கூறுகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கும், அப்பகுதியில் ரோடு அமைக்கவும் சென்ஸ் சுற்றுச்சூழல் மையம் மற்றும் குடியிருப்போர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.