பரிதவிப்பில் மணியஞ்சி பாலாஜி நகர் மக்கள்
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஒன்றியம் மணியஞ்சி ஊராட்சி பாலாஜி நகரில் சாக்கடை, குடிநீர், சாலை, தெரு விளக்கு என அடிப்படை வசதி எதுவுமே இல்லாததால் அப்பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர். இங்குள்ள பாலாஜி நகர், விரிவாக்க பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆண்டு தோறும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். அப்பகுதி திருமலை கூறுகையில், '2020ல் மெயின் ரோட்டில் இருந்து மண் சாலை அமைத்தனர். தற்போது அந்த சாலை மிகவும் பழுதான நிலையில் உள்ளது. கிராம சபை கூட்டங்களில் தார் சாலை கேட்டு தீர்மானம் நிறைவேற்றியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மழை நேரங்களில் அதிக சிரமங்களை சந்திக்கிறோம்' என்றார். சுந்தர்ராஜன் கூறுகையில், 'அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி நிர் வாகம், பி.டி.ஓ., முதல்வர் தனிப்பிரிவு துவங்கி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வரை மனு அளித்தும் பயனில்லை. பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் தெருவிளக்கு இன்றி இரவில் வெளியே வர முடியாத சூழல் உள்ளது' என்றார். அம்சவள்ளி கூறுகையில், 'இரவு, பகல் எந் நேரமும் விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளுக்குள் படை எடுக்கின்றன. மழை நீர், கழிவுநீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகம் உள்ளது. இதனால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன் அமைத்த ஜல் ஜீவன் குடிநீர் திட்ட குழாய் பயன்பாட்டுக்கே வரவில்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம்' என்றார்.