ரேஷன் பொருள் வாங்க 5 கி.மீ., நடக்கும் மக்கள்
பேரையூர்; பேரையூர் அருகே மீனாட்சிபுரம் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ., நடந்து சென்று வருகின்றனர். பேரையூர் தாலுகா கே.மீனாட்சிபுரம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக 5 கி.மீ., தொலைவில் உள்ள கூவலப்புரத்திற்கு நடந்து சென்று ரேஷன் பொருள்கள் வாங்கி வருகின்றனர். இப்பகுதியில் ரேஷன் கடையும் இல்லை. போதுமான பஸ் போக்குவரத்தும் இல்லை. இதனால் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மீனாட்சிபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடையாவது தொடங்க வேண்டும் என்று இப்பகுதியினர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அதிகாரிகள் இவர்களது கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து பொது மக்கள் நேற்று பேரையூர் தாலுகா அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். தாசில்தார் செல்லபாண்டியிடம் பகுதிநேர கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அடுத்த மாதத்தில் பொருள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என தாசில்தார் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.