உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை வீட்டில் சுயமாக செய்து கொள்ளலாம்

பெரிடோனியல் டயாலிசிஸ் சிகிச்சை வீட்டில் சுயமாக செய்து கொள்ளலாம்

மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பெரிடொனியல் டயாலிசிஸ் சொசைட்டி ஆப் இந்தியா, இந்திய மருத்துவ சங்க மதுரை கிளை சார்பில் மருத்துவமனையில் இரண்டு நாள் சிறுநீரகவியல் கருத்தரங்கு நடந்தது. அமெரிக்காவின் மிசவுரி ஸ்கூல் ஆப் மெடிசன் கல்லுாரியின் டயாலிசிஸ் சிகிச்சை நிபுணர் ரமேஷ் கண்ணா கருத்தரங்கை தொடங்கி வைத்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான தேர்வுகளில் 'ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ்' என ஏதாவது ஒன்றின் மூலம் உடலிலுள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படும். 'பெரிடோனியல் டயாலிசிஸ்' எனப்படும் 'வயிற்றுத் தசைவழி டயாலிசிஸ்' குறித்து தலைமை சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் சம்பத்குமார் பேசியதாவது: நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு வீட்டிலேயே செய்யப்படும் வயிற்றுத் தசைவழி டயாலிசிஸ் முறை உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம், மாநில அரசின் மக்களைத்தேடி மருத்துவம் ஆகிய திட்டங்களில் இந்த சிகிச்சை முறை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளின் இல்லம் தேடி சிகிச்சை அளிக்கப்படுவதால் மருத்துவமனையைத் தேட வேண்டியதில்லை. இதன்மூலம் நோயாளியின் வாழ்க்கையும் சமூக, தொழில்முறை மறுவாழ்வும் சாத்தியமாகிறது. இது எளிதானதும் நோயாளியால் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய சிகிச்சை முறை. நோயாளிகள் தாங்களாகவே வீட்டில் டயாலிசிஸ் செய்துகொள்ள முடியும். தினசரி வாழ்க்கையில் எவ்விதக் குறுக்கீடும் இல்லாமல் குறைந்தபட்ச கண்காணிப்பிலேயே செய்யலாம். வழக்கமான ரத்த சுத்திகரிப்பு வசதி மையங்களிலிருந்து நீண்ட துாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த முறை பாதுகாப்பான தீர்வு என்றார். 300க்கும் மேற்பட்ட சிறுநீரகவியல் நிபுணர்கள், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், மருத்துவத்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி