உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐந்து மாதம் ‛வெண்டிலேட்டர் சுவாசத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி

ஐந்து மாதம் ‛வெண்டிலேட்டர் சுவாசத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு ஐந்து மாத காலம் 'வென்டிலேட்டர்' சுவாசத்தில் இருந்த மதுரையைச் சேர்ந்த 23 வயது கர்ப்பிணி குழந்தை பெற்ற பின் தொடர் சிகிச்சையில் குணமடைந்தார்.ஐந்து மாத கர்ப்பத்தின் போது காய்ச்சல், வைரல் நிமோனியாவால் இப்பெண் பாதிக்கப்பட்டார். மூச்சு திணறலுடன் மதுரை அரசு மருத்துவமனையில் 2024 செப். 8 அனுமதிக்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் (ஐ.எம்.சி.யு.) ஒரு மாதகாலம் 'வெண்டிலேட்டர்' சுவாசத்தில் இருந்தார். பின் தீவிர சுவாச சிகிச்சை பிரிவில் (ஐ.ஆர்.சி.யு.) ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். அடுத்ததாக மருத்துவ நுரையீரல் பிரிவில் 45 நாட்கள் 'வெண்டிலேட்டர்' சுவாசத்துடன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நுரையீரல் தொற்றால் காசநோய் ஏற்பட்டது. அதற்கும் சிகிச்சை பெற்று வந்தார்.கடைசியாக பிரசவத்திற்காக மகப்பேறு வார்டில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. எடை குறைவாக இருந்ததால் அக்குழந்தை சிசு சிகிச்சை பிரிவில் 12 நாட்களாக சிகிச்சையில் உள்ளது. தற்போது குழந்தையின் உடல்நலம் தேறி வருகிறது. மாதம் ஒரு வார்டு வீதம் 'வெண்டிலேட்டர்' சுவாசத்தில் இருந்த அப்பெண், சில நாட்களாக இயல்பாக சுவாசிக்க தொடங்கியுள்ளார். இன்னும் சில நாட்களில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆக உள்ள அப்பெண்ணின் நிலை குறித்து நான்கு பிரிவு டாக்டர்களும் வியப்புடன் விவரித்தனர். மருத்துவமனையில் இருந்த ஐந்து மாத காலமும் அப்பெண்ணின் உறவினர்கள், கணவர், அவர் வழி உறவினர்கள் பெண்ணுக்கு தைரியம், ஆறுதல், நம்பிக்கை தந்து தாய், சேய் இருவரையும் மீட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ