மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு நாகமலையில் மறியல்
நாகமலை: மதுரை மாநகராட்சி வார்டுகளை 100ல் இருந்து 120 ஆக உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மதுரை மேற்கு பகுதியில் துவரிமான், நாகமலை, கரடிப்பட்டி, ஏற்குடி, அச்சம்பத்து, பெருங்குடி பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துநாகமலை போலீஸ் ஸ்டேஷன் ரோடு அருகே மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 8:00 மணிக்கு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.இதையடுத்து கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுக்க 200க்கும் மேற்பட்டோரை 4 வாகனங்களில் அனுப்பிவைத்தனர். மனுவில், ''நாகமலை புதுக்கோட்டையில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம், கூலித் தொழில்களை நம்பி உள்ளன. நுாறு நாள் வேலைத் திட்ட வருமானம் மூலமே குடும்பம் நடத்துகின்றனர்.இப்பகுதியை மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத் திட்டம் ரத்தாகும். வீடு, தண்ணீர், நிலம் உள்பட அனைத்து வரிகளும் உயர்த்தப்படும். இதனால் சாதாரண தொழிலாளர்கள் கடன் சுமைக்கு ஆளாவர். நாகமலை பகுதி ஊராட்சியாகவே தொடர வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.