வீட்டுமனை ஊழலில் ராகுலும் பயனாளி
'கர்நாடகாவில் நடந்த வீட்டுமனை ஒதுக்கீடு ஊழலில் ராகுலும் பயனாளியாக இருந்து பலன் அடைந்துள்ளார். வழக்குகளைச் சந்தித்து அவமானப்படுவதில் இருந்து தப்பிக்கவே, நிலத்தை திரும்ப தர காங்கிரஸ் தலைவர்கள் முன்வருகின்றனர்' என பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, டில்லியில் நேற்று கூறியதாவது:கர்நாடக அரசு ஊழல் செய்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது. ஏழைகளிடமிருந்து நிலங்களை பறித்து, அவற்றை தங்கள் குடும்பத்தினரின் கருவூலங்களாக காங்கிரஸ் தலைவர்கள் மாற்றி வருகின்றனர்.மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா இருவருமே ராகுலின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள். ராகுல்தான் இருவருக்குமே குருவாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.இந்த கோணத்தில் பார்க்கும்போது, ஊழல் செய்வதிலும் ராகுல்தான் இருவருக்குமே வழிகாட்டியாக இருந்திருப்பார் என்று, ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாதுஇன்றைய தேதியில், கர்நாடகா அரசுதான் மிக மிக ஊழல் மலிந்த அரசு என்பது உறுதியாகியுள்ளது. கர்நாடகாவில் நடந்த ஊழல்களில் எல்லாவற்றிலும் ராகுல்தான் பயனாளியாக இருந்துள்ளார்.தன் பதவியை தவறான வழியில் பயன்படுத்தி அதன் வாயிலாக தன் குடும்ப உறுப்பினர்கள் பலன் அடைவதற்கு, மல்லிகார்ஜுன கார்கே துணை போய் உள்ளார். இதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.மல்லிகார்ஜுன கார்கேயைப் போலவே சித்தாராமையாவும், தன் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் குடும்ப உறுப்பினர்கள் பயனடைய வழி செய்துள்ளார்.தற்போது, 5 ஏக்கர் நிலத்தை மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் திரும்ப தர முடிவெடுத்துள்ளார். அப்படியானால், இதில் மோசடி நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து முழு அளவில் விசாரணை நடத்தி, உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -