உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மழை பெய்தும் நீர்வரத்து இல்லாத கண்மாய்கள்

 மழை பெய்தும் நீர்வரத்து இல்லாத கண்மாய்கள்

பேரையூர்: பேரையூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தும் நீர் வரத்து இல்லாமல் கண்மாய்கள் வறண்டு உள்ளன. பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி யூனியன்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு நீர்கொண்டு வரும் வரத்துக்கால்வாய்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டன. சில இடங்களில் துார்ந்துபோய் கிடக்கின்றன. இதனால் மழை நீர் திசை மாறி சென்று வீணாகிறது. வரத்து கால்வாய்களை பராமரிக்காததால் சீமைக் கருவேல முட்காடாக காட்சியளிக்கின்றன. பெரும்பாலான கண்மாய்களும் துார் வாராததால் சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இப்பகுதியில் கடந்த 4 நாட்கள்தொடர்ந்து மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லை. கண்மாய்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய, பொதுப்பணித் துறை நிர்வாகங்கள் அவற்றை எட்டிக்கூட பார்ப்பதில்லை. ஆக்கிரமிப்பை அகற்றி தாருங்கள் என, பலமுறை விவசாயிகள் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. கால்வாய்கள் அனைத்தும் புதர்மண்டியுள்ளதால் மழை தண்ணீர் செல்ல முடிவதில்லை. இக்கண்மாய்களால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் பயன்பெறுகின்றனர். எனவே இவற்றை உடனே பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !