பக்தர்களுக்கு சிரமம் தந்த மரப்படிக்கட்டுகள் அகற்றம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கஜலட்சுமி சன்னதியில் அமைத்திருந்த மரப்படிக்கட்டுகள் நேற்று அகற்றப்பட்டன.கோயிலில் மூலவர்களை தரிசித்துவிட்டு வரும் பக்தர்கள் கஜலட்சுமி சன்னதியில் உள்ள கருங்கற்கள் படிக்கட்டு வழியாக இறங்கி வெளியே வருவர். அந்த படிக்கட்டுகள் உயரமாக இருப்பதாக கருதினர். இதனால் கடந்தாண்டு கருங்கல் படிக்கட்டின் இருபுறமும் மரப் படிக்கட்டுகளை அமைத்தனர். அந்த மரப்படிக்கட்டுகளில் இறங்குவதற்கு பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் படிக்கட்டு பகுதியில் உள்ள கஜலட்சுமியை தரிசனம் செய்ய முடியாமலும் பக்தர்கள் தவித்தனர்.கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா கோயில் மண்டபங்களில் ஆய்வு செய்தபோது, மரப் படிக்கட்டுகளை அகற்ற வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மரப் படிக்கட்டுகள் நேற்று அகற்றப்பட்டன.