வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதுதான் கால்வாய்க்கு சேலை வழங்கினோமே. அது போதாதா?
மதுரை, ஜூலை 25- நான்காண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு மீண்டும் மீண்டும் உயிர்பெறும் செல்லுார் பந்தல்குடி மண் கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதற்கான திட்டம் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்த்த பிறகும் செயல்பாடின்றி கிடப்பில் உள்ளது. செல்லுார் கண்மாய் நிரம்பினால் அதன் உபரி நீர் குறுகலான ஷட்டர்கள் வழியாகவும் 2.6 கி.மீ., நீள பந்தல்குடி கால்வாய் வழியாகவும் இருவழிகளில் பிரிந்து வைகையாற்றுக்கு செல்லும் வகையில் ஏற்கனவே வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் வெள்ளம் பெருகிய போது கண்மாயில் இருந்து ஷட்டர்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால் செல்லுார் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து ரூ.10 கோடி மதிப்பில் குலமங்கலம் ரோட்டில் 310 மீட்டர் நீளத்திற்கு தரையில் 12 அடி ஆழத்தில் கான்கிரீட் கால்வாய் (கட் அண்ட் கவர்) அமைக்கப்பட்டு கால்வாய் மூடப்பட்டு மேற்பகுதியில் வழக்கம் போல வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது இந்த பாதையின் வழியாக தண்ணீரை வேகமாக வைகையாற்றுக்கு அனுப்ப முடியும். பரிதாபத்தில் பந்தல்குடி கண்மாயில் இருந்து கூடுதல் கனஅடி தண்ணீர் திறந்தால் பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் செல்வதில் இப்போது வரை சிரமமாக உள்ளது. ஏனென்றால் கால்வாயின் 2.6 கி.மீ., நீளம் முழுவதிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீர், குப்பை அனைத்தும் நேரடியாக கால்வாய்க்கு அனுப்பப்படுகிறது. மாநகராட்சியிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் தற்போது வரை இப்பகுதிக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை (எஸ்.டி.பி.,) செயல்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு பெய்த மழையில் கால்வாயில் நிறைந்துள்ள குப்பையைத் தாண்டி வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. உபரிநீர் செல்லும் இரண்டு கால்வாய்களையும் சரிசெய்யாவிட்டால் செல்லுாருக்கு எப்போதும் ஆபத்து என்பதால் நான்காண்டுகளுக்கு முன் ரூ.83 கோடி மதிப்பீட்டில் இரு கால்வாய்களையும் கான்கிரீட்டாக மாற்ற திட்டம் உருவாக்கப்பட்டது. மதிப்பீட்டுத்தொகை அதிகம் என்பதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் பெய்த மழையால் 'கட் அன்ட் கவர்' கால்வாய்க்கு ரூ.10 கோடி செலவிடப்பட்டது. ஜூனில் முதல்வர் ஸ்டாலின் மதுரை 'ரோடு ஷோ'வில் பங்கேற்ற போது செல்லுாரை ஒட்டியுள்ள திறந்தவெளி தரைத்தள பந்தல்குடி கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் திரைச்சீலையால் மறைத்தனர். இந்த கால்வாயை முதல்வர் பார்வையிட்ட பின் ரூ.65.8 கோடிக்கு கான்கிரீட் கால்வாய் அமைக்க அவசரமாக திட்டம் தயாரிக்கப்பட்டது. மண் கால்வாயை துார்வாரி பத்தடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர் எழுப்புவது, இந்த சுவர் ரோட்டில் இருந்து மூன்றடி உயரம் தான் வெளியே தெரியும். கரையின் இருபக்க நீளமான 5.2 கி.மீ., நீளத்திற்கும் கான்கிரீட் சுவர் எழுப்பப்படும். இந்த சுவரின் மேல் பத்தடி உயரத்திற்கு கம்பிவலை அமைத்து பொதுமக்களோ, மாநகராட்சியோ குப்பை கொட்டாமல் தடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மண் தரை கான்கிரீட் தரையாக மாற்றப்படும். முதல்வர் வந்து பார்த்ததும் கால்வாய்க்கு விமோசனம் கிடைக்கும் என நம்பிய நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் திட்டம் கிடப்பில் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்புகூட கலெக்டர் பிரவீன்குமார் நேரில் ஆய்வு செய்தார். கால்வாய் நிரம்பி ரோட்டில் மழைநீர் தேங்கினால் செல்லுார், பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். தாமதம் செய்யாமல் நிதி ஒதுக்கினால் இந்தாண்டு இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து விடலாம்.
அதுதான் கால்வாய்க்கு சேலை வழங்கினோமே. அது போதாதா?