அச்சத்தில் தவிக்கும் அஞ்சுகம் அம்மையார் நகர் குடியிருப்போர் குமுறல்
மதுரை: மதுரை கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் அஞ்சுகம் அம்மையார் நகரில் 30 தெருக்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வடிகால் வசதி இல்லாமல் தேங்கி நிற்கும் கழிவுநீர் சாக்கடை, துர்நாற்றத்திற்கு இடையே வசிக்கின்றன. இப்பகுதி குடியிருப்போர் சங்கத் தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் சுல்தான், செயற்குழு உறுப்பினர்கள் அப்துல்லா, சுந்தர், கார்த்திகேயன் கூறியதாவது: வடிகால் வசதி இல்லாததால் மழை நேரங்களில் வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி சுகாரதாரக் கேடாகிறது. 2021 ல் அமைத்த செங்குத்து உறிஞ்சி குழியில் கழிவுநீர் நிரம்பி வழிந்து மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. துாய்மைப் பணியாளர்கள் வராததால் குப்பை தேங்கி கிடக்கிறது. எம்.ஜி.ஆர்., நகர் உட்பட பலபகுதிகளின் குப்பையை சக்கிமங்கலம் - கருப்பாயூரணி மெயின் ரோட்டில் கொட்டுகின்றனர். இருபதடி ரோட்டில் ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்ல திணறுகின்றன. மழைநேரங்களில் சேறும், சகதியுமாகி அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அண்ணா ரோடு, உஸ்மான் ரோடுகளில் புதர்கள் மண்டிகிடப்பதால் பாம்புகளின் புகலிடமாகிவிட்டது. இருபத்து நான்கு மணி நேரமும் அச்சமுடனே வசிக்கிறோம். குடிநீர் வாரத்தில் 3 நாட்கள் உவர்ப்பு நீராக வருகிறது. இதனால் குடம் ரூ.13 விலைக்கு தனியார் லாரிகளிடம் வாங்குகிறோம். இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான தெருநாய்கள் திரிகின்றன. தனியாக செல்வோரை தாக்குகின்றன. இங்கு 30 மின்கம்பங்களில் பாதி செயல்படுவதில்லை. போதிய வெளிச்சம் இல்லாதது, அடிக்கடி மின்தடை, தாழ்வாக தொங்கும் மின்ஒயர்கள் போன்ற பிரச்னைகள் உள்ளன. ரேஷன் கடை எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமாகி, பராமரிப்பின்றி உள்ளது. சமூக விரோதிகள் இரவு நேரம் கஞ்சா உட்பட போதை பொருட்களை விற்கும் இடமாக பயன்படுத்துகின்றனர். கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும். நுாலக தேவைக்கு சக்கிமங்கலத்திற்கு 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது என்றனர்.