உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்; மாநகராட்சியை பாதுகாக்க பூட்டு

துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்; மாநகராட்சியை பாதுகாக்க பூட்டு

மதுரை; மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் நேற்று 2வது நாளாக போராட்டம் நடத்தினர். அவர்கள் மாநகராட்சி வளாகத்திற்குள் நுழைந்துவிடாமல் மெயின் கேட் தவிர பிற 'கேட்'கள் பூட்டப்பட்டன. துாய்மை பணிக்கான தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., துாய்மை பணியாளர் மேம்பாட்டு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. முதல்நாளான நேற்று தொழிற்சங்க நிர்வாகிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் 4 கட்டங்களாக இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சம்பள உயர்வு, தீபாவளி போனஸ் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் பிற கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதையடுத்து மாநகராட்சியில் இருந்த தொழிலாளர்களை போலீஸ் கைது செய்தது. நேற்று 2 வது நாள் போராட்டத்தின்போது தொழிலாளர்கள் யாரும் மாநகராட்சி வளாகத்திற்குள் நுழைந்துவிடாத அளவுக்கு 3 பிரதான கேட்கள் மூடப்பட்டன. மெயின் கேட்டை மட்டும் திறந்து, அடையாள அட்டை உள்ளவர்களை அனுமதித்தனர். இதனால் அவுட்போஸ்ட் அருகே துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், '75 சதவீதம் துாய்மைப் பணியாளர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். அரசாணை எண்:152 ரத்து நடவடிக்கையை அரசு தான் எடுக்க முடியும் என்றனர். சி.ஐ.டி.யு., பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், 'அரசு தரப்பில் போராட்டத்தை சுமூகமாக தீர்க்க தயாராக இல்லை. வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்து பணிகள் நடக்கிறது. முத்தரப்பு பேச்சு நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து போராட்டத்தைத் தொடர்வதா, இல்லையா என இன்று (ஆக.20) முடிவு எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ