உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி, கல்லுாரி செய்திகள்

பள்ளி, கல்லுாரி செய்திகள்

கலாம் கருத்தரங்கு மதுரை: சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 10ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 'கலாம் என்னும் அதிசய அறிவியல் மனிதர்' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் நாராயணன் தலைமை வகித்தார். நேதாஜி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் கலாம் ராஜா மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் எழுதுபொருட்கள் வழங்கினார். ஜெயபிரகாசம் சிறப்புரை ஆற்றினார். டாக்டர் கருணாகரன், தியாக தீபம் அமைப்பின் பாலு, ஜேசி எம்.எஸ். ரத்தீஷ் பாபு ஆகியோர் பேசினர். கலந்துரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து மாணவர்கள் பரிசு வென்றனர். கலாம் கனவு கண்ட லட்சிய இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பரிசளிப்பு விழா மேலுார்: குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே கை, கூடை மற்றும் கால்பந்து போட்டிகள் கிடாரிப்பட்டி லதா மாதவன் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கையுந்து மற்றும் மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் அழகர் கோவில் சுந்தர ராஜா பெருமாள் கோயில் உயர்நிலைப்பள்ளி, மகாத்மா மாண்டிசோரி பள்ளிகள் வென்றன. உடற்கல்வி இயக்குனர்கள் பசுபதி, வீரபாண்டி போட்டியை ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் செயல் அலுவலர்கள் பழனிசெல்வம், முத்துமணி, மீனாட்சிசுந்தரம், காந்திநாதன், பிரபாகரன், முதல்வர்கள் முருகன், தவமணி, டீன் ஆனந்த பாண்டியன் பரிசு வழங்கி பாராட்டினர். வேலைவாய்ப்பு கருத்தரங்கு திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடந்தது. பொருளாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி, நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாணவி பத்மஹர்ஷிதா வரவேற்றார். பயிற்சியாளர் செல்லபழனி பேசினார். மாணவி முத்துலட்சுமி நன்றி கூறினார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை: பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து, போதை ஒழிப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் திலகர்திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி விளக்கினார். போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஒழுக்கமாக கவனமாக செல்வோம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தலைமை ஆசிரியர் செல்வம், எஸ்.ஐ.,க்கள் சந்தானகுமார், ஆண்டவர் பங்கேற்றனர். இலக்கிய மன்ற நிகழ்வு மதுரை: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த் துறை சுயநிதிப் பிரிவில் நடந்த தீந்தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வில் இளங்கலை மாணவர் ரமேஷ் வரவேற்றார். முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் காந்திதுரை அறிமுக உரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக விவேகானந்த கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் ராமர், இன்றைய இளைய தலைமுறை சமூக வலைதளங்களில் இருந்து விடுபட்டு புத்தகங்களை வாசித்தல் மூலம் பெறும் அறிவு வளர்ச்சியும் வாழ்வியல் வளர்ச்சியும் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இளங்கலை மாணவன் சபரி பாண்டியன் நன்றி கூறினார். மாணவர் திருப்பதி தொகுத்து வழங்கினார். சுயநிதிப் பிரிவு தமிழ்த் துறை ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் உடனிருந்தார். நிகழ்ச்சியை மன்ற பொறுப்பாசிரியர் சத்யா தேவி ஒருங்கிணைத்தார். விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் மூத்த குடிமக்கள், இன்றைய தலைமுறைகளுக்குமான பிணைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வன் வரவேற்றார். முதல்வர் பால் ஜெயகர் இன்றைய தலைமுறையினரிடம் அலைபேசியின் தாக்கம் குறித்து பேசினார். சமூக நலன் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் காந்திமதி, இன்ஸ்பெக்டர் ஹேமமாலா பேசினர். சமூகப் பணித் துறை சார்ந்த பேராசிரியர்கள்,மாணவர்கள் விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றினர் . நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள், மாணவர்கள், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் பூர்ணிமா நன்றி கூறினார். ஊரக வளர்ச்சித்துறை கருத்தரங்கு மதுரை: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் ஊரக வளர்ச்சித்துறை கருத்தரங்கு மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் ராஜ்ஜியகொடி தலைமையில் நடந்தது. அவர் பேசுகையில் இத்துறை மாணவர்கள் சமுதாயத்திற்கு தேவையான உயரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான மானியங்களை பெற்று இத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் பேசினார். துறைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் ஜேம்ஸ் அண்ணாமலை, சின்னத்தம்பி, ஜெயராமன், ராமன், ராஜேந்திரன், சுரேஷ் பேசினர். ஓய்வு பெற்ற பேராசிரியர்களும் பங்கேற்றனர். வேல்முருகன் நன்றி கூறினார். இயற்கை வளப் பாதுகாப்புக் குழு மாணவர் அணிவகுப்பு நடந்தது. மன்றம் துவக்கம் மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் பொருளாதார மன்றம் தொடக்க விழா நடந்தது. முதல்வர் பால் ஜெயகர் பொருளாதாரத் துறை சிறப்பு குறித்து பேசினார். இந்திய பொருளாதார கழக செயலாளர் மதான், ஓய்வுபெற்ற பொருளாதாரத் துறை தலைவர் முத்துராஜா படத்தை திறந்து வைத்தார். 'நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 30 டிரில்லியனில் இருந்து 2047-ல் 35 டிரில்லியன் டாலராக உயரும்' என்றார். ஓய்வுபேராசிரியர் முத்துராஜா, முதுகலை பொருளாதாரத்துறை தலைவர் கண்ணபிரான், இளங்கலை பொருளாதார துறைத்தலைவர் ஜெயராணி கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !