பள்ளி கட்டட திறப்பு விழா
மதுரை; மதுரை ரயில்வே காலனியில் தெற்கு ரயில்வே பெண்கள் நலச்சங்க மதுரைக் கிளை சார்பில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான அட்சயா சிறப்பு பள்ளி செயல்படுகிறது.இங்கு நவீன வசதிகளுடன் 550 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கட்டட திறப்பு விழா கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் நடந்தது. சங்கத் தலைவி பிரியா திறந்து வைத்தார்.இங்கு 27 சிறப்பு குழந்தைகள் பயில்கின்றனர். அவர்களுக்கு யோகா, நடை பயிற்சி, உடல் இயக்க பயிற்சி, வாழ்க்கை திறன் பயிற்சி, தொழில் சார் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன. புதிய கட்டடத்தில் விசாலமான குளிர்சாதன வசதியுடன் கூடிய பயிலரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகள் வண்ணம் பூசப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகள் நல ஆலோசனை குழு உறுப்பினர் காமாட்சி, சங்க உதவித் தலைவி ஜோதி, பொருளாளர் வசந்தி பங்கேற்றனர்.