மதுரை தண்டாயுதபாணி கோயில் திருப்பணிகளில் ரூ.பல லட்சம் சுருட்டல் * சம்பந்தப்பட்ட ஊழியரிடம் ரகசியமாக வசூலித்த அறநிலையத்துறை
மதுரை : மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோயில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், உபயதாரர்கள் கொடுத்த ரூ.பல லட்சம் நன்கொடைகளை கணக்கில் காட்டாமல் மோசடி செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரிடம் ரகசியமாக அத்தொகையை அறநிலையத்துறை அதிகாரிகள் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இக்கோயில் திருப்பணிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. திருப்பணிகள் துவங்கிய பின் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் ரூ.8 லட்சம் நன்கொடை தந்தார். அதேபோல் பலரும் ரூ.பல லட்சம் நன்கொடை தந்தனர். இந்நிலையில் வேறு முக்கிய பிரமுகர் ஒருவர் திருப்பணிகளின் பெரும்பாலான செலவை ஏற்றுக்கொண்டார். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட கோயிலின் முக்கிய பொறுப்பில் உள்ள ஊழியர், முன்னாள் அமைச்சர் வழங்கிய ரூ.8 லட்சம் உட்பட ரூ.பல லட்சம் நன்கொடை விபரத்தை செயல் அதிகாரி அங்கையற்கண்ணியின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்தார்.இதற்கிடையே அங்கையற்கண்ணிக்கு ஒரு புகார் மனு வந்தது. அதில் நன்கொடைகளை ஊழியர் 'சுருட்டிக்கொண்டது' குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது அந்த ஊழியர் கணக்கு விபரங்களை அரைகுறையாக காண்பித்ததோடு, பலருக்கு 'அட்வான்ஸ்' கொடுத்து வைத்திருப்பதாக மழுப்பினார். மோசடி நடந்தது உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து, எவ்வளவு தொகை என கணக்கிட்டு அதற்கு ஈடாக சில மாதங்களாக அந்த ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது.தற்போது மோசடி செய்த பணத்தில் இருந்து கல்தளம், கோயில் கதவுகள் அமைத்து தருவதாக ஊழியர் உறுதி அளித்துள்ளார். அப்பணி முடிந்ததும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதேசமயம் மோசடி செய்த ஊழியர் குறித்து போலீசில் புகார் செய்யாமல், அவரிடம் ரகசியமாக வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'மோசடி நடந்தது குறித்து உபயதாரர்களுக்கு தெரிந்தால் திருப்பணிகள் பாதிக்கும். கோயிலின் பெயரும் கெடும். போலீசில் புகார் செய்திருந்தால் மோசடி பணத்தை திரும்ப பெற்றிருக்க முடியாது. இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது'' என்றனர்.
தொடரும் சர்ச்சை
///இக்கோயிலில்தான் சிலநாட்களுக்கு முன் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்த செயல்அலுவலர் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்பால் வாபஸ் பெறப்பட்டது. தற்போது கோயில் திருப்பணிகளில் முறைகேடு நடந்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.