சிவாச்சாரியார் என்பது படித்து வாங்கிய பட்டம்
மதுரை: சிவாச்சாரியார் என்பது படித்து வாங்கிய பட்டம்; அதற்கு நான்கு வேதங்களில் ஒன்றை முழுமையாக கற்பது அவசியம் என மதுரையில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார். மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் வளாகத்தில் பிப்.,25 வரை 'எண்மர் போற்றும் எண் குணத்தான்' எனும் இசையரங்கம், உரையரங்கம் நடக்கிறது. நேற்று 'நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்' எனும் தலைப்பில் குமாரசாமி நாத தேசிகர் இசையுரை வழங்க, திண்டுக்கல் சிவபுரம் ஆதினம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது: சைவ சமயத்தில் ஆத்மார்த்தமாக 4 படிநிலைகளாக தீட்சைகள் விளக்கப்பட்டுள்ளது. அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது. சிவாச்சாரியார் என்பது படித்து வாங்கிய பட்டம் தான்; வேதம், ஆகமம் படிப்பது எளிதல்ல. நான்கு வேதங்களில் ஒன்றை படித்தாலே போதும். ஆத்மார்த்த பூஜை செய்பவர்கள் மட்டுமே சிவனை தொட்டு பூஜை செய்ய தகுதியுடையவர்கள். அக்காலத்தில் பெரியவர்கள் 'ஒவ்வொரு நொடியும் சிவனுக்கே அடியேன் அடிமை'என வாழ்ந்தார்கள். சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்கள் சமய தீட்சையில் விளக்கப்பட்டுள்ளன. அவை கடவுளை ஒளி வடிவத்தில் நம் முன்னே முன் நிறுத்துகின்றன. உலகின் பஞ்ச பூதங்களும் உடலில் இருக்கிறது. குருவால் மட்டுமே நம் பக்குவ நிலை உணர்ந்து தீட்சைக்கு வழிகாட்ட முடியும் என்றார். இன்று மாலை 6:30 மணிக்கு 'தேடி கண்டுகொண்டேன்' தலைப்பில் இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை சிருங்கேரி சாரதா பீடம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.