13 வயது சிறுமியின் மூளை ரத்தக்கசிவுக்கு தீர்வு
மதுரை : மூளை ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 'ஹோல் எக்ஸோம் சீக்வென்ஸிங்' மூலம் 'பயாலஜிக்கல் தெரபி' கொடுத்து ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. சிறுமிக்கு அபூர்வமான 'டி.ஏ.டி.ஏ.,2' எனும் மரபியல் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற நோய் மரபணுக்கள் வழியாக கடத்தப்படுகிறது என்கிறார் நரம்பியல் சிகிச்சை துறையின் முதுநிலை டாக்டர் நரேந்திரன். அவர் கூறியதாவது: இப்பாதிப்பு இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல், சிறிய ரத்தத் தட்டுகள் பாதிக்கப்படும். இதனால் மூளையில் அழற்சி ஏற்பட்டு ரத்தத்தட்டுகள் சேதமடையும், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படக்கூடும். இச்சிறுமிக்கு 'ஹோல் எக்ஸோம் சீக்வென்ஸிங்' எனப்படும் அதிநவீன மரபியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ' அடலிமுமாப்' என்ற உயிரியல் மருந்தை செலுத்தி அரிப்பு மற்றும் வீக்கத்தை சரிசெய்து, ரத்தத் தட்டுகள் நிலைப்படுத்தப்பட்டது. இச்சிகிச்சை தொடங்கியதிலிருந்தே நோயாளிக்கு ரத்தக்கசிவு ஏற்படவில்லை. இப்பிரச்னை இருப்பவர்கள் ஆண்டுக்கணக்கில் பரிசோதனை செய்யாமல் இருக்கின்றனர். தொடக்க நிலையிலேயே மரபியல் பரிசோதனை மேற்கொண்டதால் துல்லியமான சிகிச்சையளிக்க முடிந்தது. இந்நோயாளிகளுக்கு ரத்த செல்களில் அசாதாரண நிலை ஏற்பட்டால் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படும் என்றார். நரம்பியல் சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் விஜய்ஆனந்த், அறுவைசிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் செல்வ முத்துக்குமரன், டாக்டர் செந்தில்குமார், டாக்டர்கள் ஜெபர்லின் சினேகா, கவுதம் குன்ச்சா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.