பார்சல் சர்வீஸ் உரிமையாளர் கொலையில் திருப்பம் கூலிப்படையை நச்சரித்த பங்குதாரர் மகன் கைது
மதுரை: மதுரையில் பார்சல் சர்வீஸ் உரிமையாளர் கொலை வழக்கில், 'பணம் பெற்றுக்கொண்டு இன்னும் முடிக்கலையா' என கூலிப்படையை நச்சரித்த பங்குதாரர் கல்லாணையின் மகன் பொன்சரவணன் என்ற அகமது 32, கைது செய்யப்பட்டார். மதுரை பார்க் டவுன் ராஜ்குமார் 52. இவரும், சந்தைப்பேட்டை கல்லாணையும் 55, சேர்ந்து முனிச்சாலையில் 'ஆர்.கே.' என்ற பெயரில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்தினர். ஒப்பந்தத்தை மீறி தனது மகன் பொன்சரவணன் என்ற அகமதுவை மற்றொரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என கல்லாணை வற்புறுத்தினார். இதை ஏற்க மறுத்த ராஜ்குமாரை செப்.,12 இரவு கூலிப்படை மூலம் கல்லாணை கொலை செய்தார். இவ்வழக்கில் அவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 'இக்கொலையில் பொன்சரவணனுக்கும் தொடர்பு உண்டு. அவரையும் கைது செய்ய வேண்டும்' என போலீசாரிடம் ராஜ்குமார் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதையறிந்த பொன்சரவணன் தலைமறைவானார். ஆறு நாள் தேடுதலுக்கு பிறகு நேற்று கைது செய்யப்பட்டார். போலீசார் கூறியதாவது: பொன்சரவணன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அகமதுவாக மாறினார். திருச்சியில் இவருக்கு, கல்லாணை ஒரு பார்சல் நிறுவனம் வைத்துக்கொடுத்தார். அதில் ஓரளவுதான் வருமானம் கிடைத்தது. இதனால்தான் 'ஆர்.கே.' பார்சல் நிறுவனத்தில் பொன்சரவணனை பங்குதாரராக சேர்க்க கல்லாணை விரும்பினார். இதற்கு இடையூறாக ராஜ்குமார் இருந்ததால் அவரை 'தீர்த்துக்கட்ட' முடிவு செய்து கூலிப்படைக்கு ரூ.10 லட்சத்தை கல்லாணை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் காலதாமதம் செய்ததால், 'பணம் பெற்றுக்கொண்டு இன்னும் முடிக்கலையா' என அடிக்கடி பொன்சரவணன் 'நச்சரித்து' வந்துள்ளார். கொலைக்கு துாண்டுதலாக இருந்ததால் அவரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.