நவ.4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு..வீடுவீடா வருவாங்க: ஆவணங்களை சரிபார்க்க 3050 ஓட்டுச்சாவடி அலுவலர்கள்
மதுரை: மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 3050 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடுவீடாக வந்து சரிபார்க்க உள்ளனர். மதுரை மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 3082 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாக்காளர் பட்டியல் ஆண்டுதோறும் செப்டம்பரில் வரைவு பட்டியலாக வெளியிட்டு, சேர்க்கை, நீக்கம் செய்தபின்னர் ஜனவரியில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே 2002ல் இதுபோன்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின் தற்போது இப்பணி மீண்டும் நடக்கிறது. நவ.4 ல் துவங்கி டிச.4 வரை நடக்க உள்ளது. வீடுவீடாக படிவம் வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் 3050 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் (பி.எல்.ஓ.,க்கள்) ஈடுபட உள்ளனர். இவர்களில் 10 பி.எல்.ஓ.,க்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பர். இதற்கு வருவாய் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நகர் பகுதியில் 2005 வாக்காளர் பட்டியல் அடிப்படையிலும், ஊரக பகுதியில் 2002 வாக்காளர் பட்டியல் அடிப்படையிலும் இத்திருத்தப்பணியை மேற்கொள்வர். அதனடிப்படையில் வீடுவீடாக சென்று படிவம் வழங்குவர். மேற்கண்ட ஆண்டுகளுக்கு பின்பு வாக்காளர் ஆனவர்கள் அலுவலர்கள் கேட்கும் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்ட வேண்டும். பிறப்பு சான்று, ஆதார், வீட்டுவரி ரசீது உட்பட 11 ஆவணங்களை காட்டலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு புதிய சேர்க்கை, திருத்தம், நீக்கம் இருந்தால் அதற்கான படிவத்தையும் அவர்களிடமே பெறலாம். ஒரு வாரத்திற்கு பின் அதே அலுவலர்கள் மீண்டும் வரும்போது அவர்கள் வழங்கிய படிவத்தை கையெழுத்திட்டு ஒப்படைக்க வேண்டும். பிப்.7 ல் இறுதிப்பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 9ல் வெளியிடப்படும். அதில் ஆட்சேபனைகள், திருத்தங்கள் இருந்தால் சரிசெய்யக்கோரி ஜன.8 வரை தெரிவிக்கலாம். இதுபோன்ற புகார்கள் சரிபார்க்கும் பணி டிச.9 முதல் 2026 ஜன.31 வரை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.7ல் வெளியிடப்படும். மதுரை மாவட்டத்தில் சிறப்பு திருத்தப் பணிக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன்குமார் தலைமையில், நேர்முக உதவியாளர் ரங்கநாதன், ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் உட்பட வருவாய் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.