உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடஒதுக்கீட்டில் விளையாட்டு ‛கோட்டாவை அதிகரிக்க வேண்டும்

இடஒதுக்கீட்டில் விளையாட்டு ‛கோட்டாவை அதிகரிக்க வேண்டும்

மதுரை: தமிழகத்தில் வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் விளையாட்டு கோட்டாவை அதிகரிக்க வேண்டும் என பள்ளி, கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் வலியுறுத்துகின்றனர்.15 ஆண்டுகளுக்கு முன் வரை தமிழகத்தில் விளையாட்டு கோட்டா மூலம் வீரர், வீராங்கனைகள் போலீஸ், மின்வாரியம், போக்குவரத்து போன்ற துறைகளில் வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாளடைவில் விளையாட்டு கோட்டா நிறுத்தப்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் மீண்டும் 3 சதவீத வேலை வாய்ப்புக்கான கோட்டா உருவாக்கப்பட்டது. அதன் பிறகு எந்த செயல்பாடும் இல்லாத நிலையில் கடந்தவாரம் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த துணைமுதல்வர் உதயநிதி, விளையாட்டு கோட்டா 3 சதவீதம் செயல்படுத்தப்படும்; முதற்கட்டமாக 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்தார். ஆண்டுக்கணக்கில் விளையாட்டு கோட்டா மூலம் வேலை வாய்ப்பு கிடைக்காத தேசிய, மாநில விளையாட்டு வீரர்கள் ஏராளமாக உள்ளனர். எனவே 3 சதவீதம் என்பதை 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என பள்ளி, கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் வலியுறுத்தினர்.அவர்கள் கூறியதாவது: படிவம் 3 சான்றிதழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு மூலம் போலீஸ் வேலை கிடைக்கிறது. தேசிய போட்டிகளில் ஜெயிப்பவர்களுக்கு மத்திய அரசின் வங்கி, தபால், ரயில்வே, இன்சூரன்ஸ் துறைகளில் வேலை கிடைத்தது. முதலில் மதுரை காமராஜ் பல்கலை, சென்னை பல்கலை மட்டுமே இருந்தன. அவற்றின் மூலம் வழங்கப்படும் படிவம் 3 சான்றிதழ் மாநில அளவில் தகுதியுடையதாக இருந்த நிலையில் நிறைய பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். தற்போது பல்கலைகள் அதிகரித்துள்ளதால் அனைத்திலும் படிவம் 3 சான்றிதழ் தருகின்றனர். சான்றிதழ் பெறுவோர் அதிகரித்ததால் போட்டி அதிகமாகி விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக அரசின் மின்வாரியம், போலீஸ் துறை, போக்குவரத்து கழகங்களில் மாவட்டங்கள் தோறும் விளையாட்டு அணிகள் இருந்தன. அதையெல்லாம் நிறுத்திவிட்டனர். மத்திய அரசின் தபால் துறையில் மதுரை, சென்னை போன்ற அணிகள் இருந்தன. அந்தளவு விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தந்தன. தற்போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, ஊரகத்துறைகளில் விளையாட்டு அணிகளே இல்லை. விளையாட்டுப் போட்டிகளில் ஜெயித்தவர்களுக்கு போலீஸ் தவிர வேறு துறைகளில் வேலை கிடைப்பதில்லை. பள்ளி, கல்லுாரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு ரூ.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் தவிர மற்ற பிரிவினர் ரெகுலராக விளையாட்டுகளில் பங்கேற்பவர்களாக உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பெயரளவிற்கு போட்டிகள் நடத்தப்பட்டு பணம் செலவிடப்படுகிறது. இதனால் யாருக்கும் லாபமில்லை. அனைத்து துறைகளிலும் விளையாட்டு கோட்டா மூலம் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டை உருவாக்கி அணிகளை தேர்வு செய்து ஆண்டுதோறும் போட்டிகள் நடத்த வேண்டும். தற்போதுள்ள 3 சதவீதத்தை 5 சதவீதமாக அதிகப்படுத்தினால் தகுதியான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் வரை பங்கேற்று பதக்கங்களை வெல்ல முடியும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ