திறந்தவெளி வாய்க்காலால் அவதி பசுவை காப்பாற்றிய மாணவர்கள்
மதுரை : மதுரை அய்யர் பங்களா முதல் பார்க் டவுன் பஸ் ஸ்டாண்ட் வரையான ரோட்டின் நடுவே உள்ள திறந்தவெளி வாய்க்காலில் விழுந்த பசுவை அப்பகுதி மாணவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து மீட்பதற்கு உதவினர்.பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சுகதேவ், ரூமி, ஆறாம் வகுப்பு மாணவர் ஸ்ரீஜித் நேற்றிரவு சைக்கிளில் அப்பகுதியை கடந்த போது பள்ளத்தில் கிடந்த பசுவின் கதறலை கேட்டதும் 101 க்கும், விலங்குகள் நல ஆர்வலர் சாய் மயூருக்கும் தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு துறையினர் வந்து கயிறு கட்டி பசுவை மீட்டனர். அவர்கள் கூறுகையில், ''அய்யர் பங்களா முதல் பார்க் டவுன் பஸ் ஸ்டாண்ட் வரை நீர்வரத்து வாய்க்கால் பிரிந்து செல்லும் பகுதியில் 2 கி.மீ., நீளத்திற்கு ஆறு முதல் பத்தடி ஆழம்வரை பள்ளம் உள்ளது. ஆண்டுக்கு 10 முதல் 15 பசு, மாடுகள் இதனுள் விழுகின்றன. அவற்றை கயிறு கட்டி மீட்டோம். இரவில் மாணவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக மீட்டோம் என்றனர்.நீர்வளத்துறைக்கு சொந்தமான தண்ணீர் செல்லும் இரு வாய்க்கால்கள் பிரியும் இடத்தில்தான் பள்ளம் துவங்குகிறது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. மாடுகள் சண்டையிடும் போதோ, விரையும் வாகனங்களுக்கு விலகும் நிலையிலோ பள்ளத்திற்குள் விழுகின்றன. திறந்தவெளி பள்ளத்தில் கம்பி வலை அமைக்க வேண்டும்.