உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இந்திய இளைஞர்களை நம்பிய சுவாமி விவேகானந்தர் இன்று (ஜன., 12) தேசிய இளைஞர் தினம்

இந்திய இளைஞர்களை நம்பிய சுவாமி விவேகானந்தர் இன்று (ஜன., 12) தேசிய இளைஞர் தினம்

இளைஞர் என்றாலே நம் மனங்களில் ஓர் இன்முகம் பிரகாசிக்கும். இந்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தரின் திருமுகம் தான் அது. அவரது பிறந்த தினத்தைத்தான் நமது நாடு தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடுகிறது.இளைஞர்களே! மாணவ மாணவிகளே! நீங்கள் என்றென்றும் உற்சாகத்துடன் வாழ வேண்டும் என்று ஆவலாக இருக்கிறீர்களா.சுவாமி விவேகானந்தர் என்ற மாபெரும் தலைவரை நீங்கள் அறிந்து கொண்டால் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். அந்தப்புது ஊக்கம் உங்களை என்றென்றும் உற்சாகத்துடன் வைத்திருக்கும்.இன்று உலகம் முழுவதும் செல்லும் இடங்களில் எல்லாம் இந்திய இளைஞர்களுக்கு மரியாதை கிடைக்கிறது. அதற்குக் காரணம் தெரியுமா.நம் நாட்டின் ஆன்மிகச் செழுமையை உலகிற்கு அறிமுகப்படுத்தி, நமக்கு மட்டுமல்லாமல் நானிலத்திற்கே பெருமைச் சேர்த்தவர் சுவாமி விவேகானந்தர்.சிகாகோவில் 1893 ல் சர்வ சமயப் பேரவையில் அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே என்று விளித்து ஒற்றை வரியில் பாரெங்கும் பாரதப்பெருமையைப் பறை சாற்றினார்.இந்திய சுதந்திரப்போராட்டத்தில், போராட்ட வீரர்கள் தேசபக்தி கொண்ட விவேகானந்தரின் நுால்களை வாசித்ததன் மூலம் மேலும் உற்சாகத்துடன் முறையாக முன்னேறினார்கள்.வழிகாட்டும் சிந்தனைஇன்று அரசியல், சமூக சேவை, விளையாட்டு, கல்வி என எந்தத்துறையிலும் சாதிக்க நினைப்பவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் வழிகாட்டுகின்றன.மகாகவி பாரதியாரின் ஞானகுருவான சகோதரி நிவேதிதை பதிவு செய்துள்ளார்:இந்தியா சுவாமி விவேகானந்தரின் நெஞ்சில் துடித்தது, இந்தியா அவரது நாடித்துடிப்பாக இருந்தது, இந்தியா அவரது கனவு... அவரே இந்தியா ஆனார். அவர் இந்தியாவின் ரத்தமும் சதையுமாக விளங்கினார். அவர் பாரதத்தின் ஆன்மிகமாக, பாரதத்தின் தூய்மையாக, பாரதத்தின் ஞானமாக, பாரதத்தின் சக்தியாக, பாரதத்தின் உயர்ந்த நோக்கமாக, அவ்வளவு ஏன் பாரதத்தின் விதியின் சின்னமாக விளங்கினார்.இளைஞன் என்றால் உடல்பலமோ, வெறும் வயதோ மட்டுமல்ல. உடல், மனம், அறிவு, பேச்சு, மூச்சு, வீச்சு என அனைத்திலும் திடமான நிலையை அடைய வேண்டும் என்று விளக்கியவர். அதன்படியே அவர் வாழ்ந்தவர்; நம் ஒவ்வொருவரையும் அவ்வாறு வாழ வேண்டும் என்று பணித்தார்.விவேகானந்தரின் தெய்வீக மற்றும் தேசிய சிந்தனைகளின் தமிழ் குரலாக பாரதியார் விளங்கினார். பாரதியாரின் ஞானகுரு சகோதரி நிவேதிதை. அந்தக் குருவின் சீடனாக தன்னை மாற்றிக் கொண்டவர் பாரதியார்.அந்த வகையில் சுவாமி விவேகானந்தர் சீடர் பரம்பரையில் பாரதியாரும் நிமிர்ந்து நிற்கிறார். சாதம் படைக்கவும் செய்திடுவோம். தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம் என்று தேசியக் கவி முழங்குவதற்கு அடி எடுத்துக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

பெண் கல்வி அவசியம்

பெண்களுக்குக் கல்வி அவசியம், கல்வியே அவர்களை முன்னேற்றும் என்று இந்தியப் பெண்மணிகளுக்காக முதன் முதலில் உரிமை கோரியவர் சுவாமி விவேகானந்தர்.பெண்களுக்கு முன்னேற்றப் பாதையை வகுத்துக் கொடுத்தவர்; பல சீரிய பெண்மணிகளை உருவாக்கினார். இன்றைய பெண்களுக்குத் தன்னம்பிக்கையை அளித்தவர், சவால்களைச் சந்தித்து ஜெயித்திடு என்று முழங்கியவர்.சுவாமிஜியைப் பொருத்தமட்டில் கல்வி என்பது ஏதோ ஒரு பட்டப்படிப்போடு முடிந்து விடுவதல்ல. மாறாக, ஒவ்வொரு கணமும் வாழ்க்கையிலிருந்து நாம் கற்க வேண்டும். கற்ற ஒவ்வொன்றும் நமக்கும் பிறருக்கும் பயன் பெற வேண்டும் என்று கல்வியை குறித்து விவரமாக கூறுவார். கல்விதான் எல்லா பிரச்னைக்கும் தீர்வு என்று அறிவித்தார் சுவாமி விவேகானந்தர்.நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துக்களை நன்கு கிரகித்து, அவற்றை உங்கள் வாழ்க்கையாக, நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால், ஒரு புத்தகச்சாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனைவிட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர் ஆவீர்கள். செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நுால் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள்! கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள்! என்று சுவாமி விவேகானந்தர் நம்மிடையே கேட்கிறார்.

எப்படிப்பட்ட கல்வி

சிறந்த குணத்தை உருவாக்குகிற, மன வலிமையை வளர்க்கிற, அறிவை விரியச் செய்கிற, ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கிற கல்வியே தேவை.சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப்போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி, அதைக் கல்வி என்று சொல்ல முடியுமா. ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலேயே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி.கடவுள் யார் எனக் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கூறுவார்கள். ஆனால் நாத்திகர்கள் கூட கடவுளை ஏற்கும் விதத்தில் சுயநலமின்மையே கடவுள் என்று அதனை எளிய முறையில் விவேகானந்தர் விளக்கினார்.போட்டி என்று வருமானால் நம் இளைஞர்கள் உலகில் உள்ள எந்த இளைஞர்களையும் வெல்வார்கள் என்று நம் நாடு ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த போதே சுவாமி விவேகானந்தருக்கு கூற முடிந்தது என்றால் இளைஞர்களே...உங்கள் ஒவ்வொருவரும் மீதும் விவேகானந்தர் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதைப் பாருங்கள்.நமது ஜீவ ரத்தம் ஆன்மிகம். அந்த ரத்தம் தூய்மையாக இருக்குமானால் அரசியல், சமுதாயம், பொருளாதார குறைபாடுகள் எல்லாம் சீர் செய்யப்பட்டு விடும். ஏன் நாட்டின் வறுமைகூட தீர்க்கப்பட்டு விடும். ஏனென்றால் நோய்க்கிருமி வெளியேற்றப்படுமானால் வேறு எதுவும் ரத்தத்தில் கலக்க முடியாது என்பது சுவாமி விவேகானந்தரின் முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும்.அவரது உபதேசங்களை இவ்வாறு சுருக்கலாம்.இளைஞனே, யுவதியே! உன் உடலை உறுதியாக்கு, உலகிற்கு உழைப்பதற்காக!உன் உள்ளத்தை உறுதியாக்கு, பெரும் காரியங்கள் ஆற்றுவதற்காக!அறிவை ஆழமாக்கு, உன் நாட்டையும் உன்னையும் உயர்த்திக் கொள்ள.இளைஞர்களே, சுவாமி விவேகானந்தர் கூறுவது போல் நாம் மனிதர்களாகப் பிறந்து விட்டோம். நாம் வாழ்ந்து மறைந்ததற்கான நல்ல ஓர் அடையாளத்தை இந்த உலகில் விட்டுச் செல்வோம்!-- சுவாமி விமூர்த்தானந்தர், தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ