பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு முன்னுதாரணம் தமிழகம் துணைமுதல்வர் உதயநிதி பெருமிதம்
மதுரை : ''மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கு பயிற்சி மைதானம் அமைத்து தருவதில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழகம் இருப்பதாக'' மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். தமிழகத்தில் சென்னை, மதுரையில் நவம்பர் இறுதியில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. அதற்காக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம், பார்வையாளர்கள் காலரி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச தரத்தில் 50 மீட்டர் நீளத்தில் நீச்சல்குளம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை வந்த துணைமுதல்வர் உதயநிதி, இரண்டு பணிகளையும் ஆய்வு செய்தார். பாரா விளையாட்டு வீரர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட உள்ளரங்கில் நடந்த போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார். பின்னர் கூறியதாவது: பாரா விளையாட்டு வீரர்களுக்காக மைதானம் அமைத்துத் தருவதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நவ., 28 முதல் டிச., 10 வரை நடக்க உள்ள உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க 29 நாடுகளைச் சேர்ந்த அணிகள் தயாராக உள்ளன. போட்டி நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கைப் போல, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஹாக்கி அரங்கை சீரமைத்து பார்வையாளர் காலரி அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன என்றார். வடமாநில வீரர்களுக்கு அனுமதி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின் உதயநிதி கூறியதாவது: முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பிற மாநில வீரர்களை விளையாடக்கூடாது என சொல்ல முடியாது. அவர்கள் தமிழகத்தில் தங்கி படிக்கும் போது விளையாட அனுமதிக்கலாம். முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு தகுதி, திறமையுள்ளவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர் என்றார். மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரம் குறித்து கேட்டதற்கு 'முதல்வர் நடவடிக்கை எடுப்பார்' என்றார்.