உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாஸ்போர்ட் பெறுவதில் கேரளாவை அடுத்து தமிழகம் முன்னிலை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வசந்தன் தகவல்

பாஸ்போர்ட் பெறுவதில் கேரளாவை அடுத்து தமிழகம் முன்னிலை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வசந்தன் தகவல்

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரி, மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.இதில் பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேசியதாவது: உலக நாடுகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதால் பாஸ்போர்ட் மதிப்பும், தேவையும் அதிகரித்து வருகிறது. வளரும் நாட்டில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவாக, கல்வி, தொழிலுக்காக செல்லும் தேவை அதிகரிக்கும். உலகளவில் சீனா, அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகம். ஆண்டுக்காண்டு பாஸ்போர்ட் தேவை அதிகரித்து வருகிறது. மதுரையில் ஓராண்டில் 3 லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கேரளாவை அடுத்து தமிழகத்தில் பாஸ்போர்ட் தேவை முன்னிலையில் உள்ளது. வெளிநாடுகளில் 3.5 கோடி இந்தியர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 18 வயதுக்கு மேல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க பிறந்த தேதி, முகவரி ஆதார ஆவணங்கள் போதும். இதுதவிர ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிம அசல் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். முன்பு போலின்றி, இக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் அலைபேசியில் விண்ணப்பித்து நேரில் ஒரு நாள் நேர்முக தேர்வில் பங்கேற்று ஒரு மணி நேரத்தில் முடியும் அளவு வளர்ந்துள்ளோம். இன்று ஒவ்வொருவருக்கும் 50 கி.மீ., வட்டாரத்தில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன என்றார். பாஸ்போர்ட் கேந்திரா அலுவலர் விஜயலட்சுமி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது குறித்து விளக்கினார். துணை அலுவலர்கள் சீனிவாசன், துணை முதல்வர் மாட்டின் டேவிட், போராசிரியர் ஜஸ்டின் மனோகர், ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் பொன்ராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !