உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழின் சிறப்பே ‛ழகரம் என்றவர் காஞ்சி பெரியவர் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்கம்

தமிழின் சிறப்பே ‛ழகரம் என்றவர் காஞ்சி பெரியவர் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்கம்

மதுரை : ''தமிழின் சிறப்பு அதில் உள்ள 'ழ' என ஸ்ரீகாஞ்சி மகா பெரியவர் கூறினார்'' என்று, மதுரைஅனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் நடந்த காஞ்சி மகா பெரியவர் ஆராதனை விழாவில் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்.ஸ்ரீ மஹா பெரியவா மகிமை என்ற தலைப்பில் மதுரை எஸ். எஸ்., காலனி பிராமண கல்யாண மகாலில் சொற்பொழிவு நடந்தது.இதில் அவர் பேசியதாவது: காஞ்சிமாமுனிவர் ஞானம் எவரிடமும் காணமுடியாதது. தமிழறிஞர் கி.வா.ஜகன்னாதன் மகாபெரியவரை தரிசனம் செய்ய வந்தார். அவரிடம், நம் மொழிக்கு தமிழ் என பெயர் வந்ததேன் என்று கேட்டார். உடனே கி.வா.ஜ., உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள், என்றார்.பெரியவரும், தமிழின் தனிச்சிறப்பே அதன் 'ழ 'கரம் தான். இதனை தெளிவாக உச்சரிக்க முடிந்தவர்களுக்கு பேச்சு சரளமாக வசப்படும். அது மட்டுமின்றி ழ என்று சொல்லச் சொல்ல நம் சஹஸ்ரநாமமாகி உச்சம் தலையில் அமிர்தம் சுரந்து பெருகும். அது உடலுக்கும் ஆரோக்கியம் என சித்த நெறி சொல்கிறது.இப்படி ழ வரும் சொற்கள் மங்கலமானவை. அந்த ழவன்னாவை கொண்ட மொழி தமிழ். அதாவது தமிழிடம் ழ உடையது என்பதே சுருங்கி தமிழ் ஆனதாக எனக்கு தோன்றியது, என்றார் பெரியவர். கி.வா.ஜ.,வும் உங்கள் ஆராய்ச்சி தமிழுக்கு அழகு சேர்ப்பதாகவே உள்ளது, என்றார்.அதேபோல 'அறம் செய விரும்பு' என்ற ஆத்திச் சூடி வரிகளை, ஏன் அறம் செய் என்று அவ்வை கட்டளையாக கூறவில்லை என்றும் கேட்டார். பின் அவரே, விரும்புவதையே தொடர்ந்து செய்வோம். கட்டளையிட்டால் ஒரு முறையோ, இல்லை இருமுறையோ செய்து விட்டு விலகி விடுவோம். எனவேதான் அறம் செய விரும்பு என்று மூன்று சொற்களாகக் கூறியதாக மகா பெரியவர் கூறினார். இவ்வாறு இந்திரா சவுந்தரராஜன் பேசினார்.அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்திருந்தார். இன்று ( ஜன.8) காலை 9:00 மணிக்கு ஸ்ரீ மகா பெரிய விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து இலக்கிய மேகம் சீனிவாசன் பேச உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ