முதல் இரண்டு இடங்களுக்குள் மதுரை தலைமையாசிரியர்களுக்கு டார்கெட்
மதுரை: 'பத்தாம் வகுப்பு. பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சியில் மாநில பட்டியலில் மதுரை முதல் இரண்டு இடங்களுக்குள் வர வேண்டும். அதற்கான பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்' என சி.இ.ஓ., தயாளன் தெரிவித்தார். மதுரையில் அனைத்து அரசு உயர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கான ஆய்வுக் கூட்டம் சி.இ.ஓ., தயாளன் தலைமையில் நடந்தது. அதில் அவர் பேசியதாவது: பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக மாணவர்களை தயார்படுத்தும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 என இரண்டு தேர்வுகளிலும் இந்தாண்டு மாநில அளவில் மதுரை முதல் அல்லது இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும். அதற்கான இலக்குடன் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். 'திறன்' மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்குள் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். ஆசிரியர், மாணவர், பள்ளி நலன் சார்ந்த குறைகளை என் கவனத்திற்கு கொண்டு வரலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் ஒரு பள்ளிக்கு காலையில் வருவேன். ஆசிரியர்கள் காலை 9:00 மணிக்கும், தலைமையாசிரியர்கள் 8:30 மணிக்கும் பள்ளிக்கு வரவேண்டும். மாணவர்களுக்கான ஆதார் புதுப்பிப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணிகளை உடன் முடிக்க வேண்டும் என்றார். டி.இ.ஓ.,க்கள் கார்மேகம், மோகன், உதவித்திட்ட அலுவலர் சரவணமுருகன் பங்கேற்றனர். 'இமெயில்' தாமதம் வழக்கமாக ஆய்வுக் கூட்டம் குறித்து முன்கூட்டியே பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். நேற்றைய கூட்டத்திற்கான தகவல் தலைமையாசிரியர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்பட்டது. முதல்நாள் இரவு 8:00 மணிக்கு மேல் பள்ளிகளுக்கு 'இ மெயில்' வந்தது. கூட்டமும் தாமதமாக துவங்கியது. இது அடுத்த கூட்டங்களில் தவிர்க்கப்பட வேண்டும் தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.