பூனை கடித்து ரேபிஸ்: வாலிபர் தற்கொலை
மதுரை: பூனை கடிக்கு உரிய சிகிச்சை எடுக்காததால், 'ரேபிஸ்' பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.மதுரை, அவனியாபுரம், மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்; டிகிரி முடித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன், வீட்டின் மாடியில் துாங்கிய போது, இரு பூனைகள் சண்டையிட்டுள்ளன. பாலமுருகன் விலக்கச் சென்றபோது, ஒரு பூனை அவரது தொடையில் கடித்தது. இதில், காயம் ஏற்பட்டதால் டி.டி., தடுப்பூசி மட்டும் செலுத்தியுள்ளார். கடந்த வாரம், தொடர் தலைவலியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன், மூன்று நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனையில் ரேபிஸ் பாதிப்பாக இருக்கலாம் என, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு நாய்க்கடி வார்டில் அனுமதித்த போது கூச்சலிட்டபடி தப்பியோடினார். மீண்டும் இரவு 11:30 மணிக்கு அழைத்து வரப்பட்டு, தனியறையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அதிகாலை 2:30 மணிக்கு, அறையின் இரும்பு கதவின் கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.டாக்டர்கள் கூறியதாவது:நாய், பூனை, குரங்கு உட்பட எந்த விலங்குகள் கடித்தாலும், 'ஏ.ஆர்.வி.,' எனப்படும் 'ரேபிஸ் வைரஸ் தடுப்பூசி' போட வேண்டும். இது, வெறிநாய் கடிக்கு மட்டும் போடப்படுவதில்லை. டி.டி.,யுடன் சேர்த்து முதல் நாள் தடுப்பூசி போட வேண்டும். அடுத்தது, மூன்றாம் நாள் மற்றும் ஏழு, 28வது நாளில் தடுப்பூசி போடுவது அவசியம்.ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. நான்கு டோஸ் தடுப்பூசி போட்டால் தான் உயிருக்கு பாதுகாப்பு. இதில் அலட்சியமாக இருந்தால், ரேபிஸ் வந்த பின் காப்பாற்றுவது இயலாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.