மேலும் செய்திகள்
கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
06-Feb-2025
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சில ஊழியர்கள் உரிய கல்வித்தகுதியின்றி பணிபுரிவது தெரியவந்துள்ளது.மீனாட்சி அம்மன் கோயிலில் சேவுகர் உள்ளிட்ட பணிகளில் சேர்ந்தவர்களில் 27 பேர் போலி கல்விச்சான்று கொடுத்து பணியாற்றுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அறங்காவலர் குழு விசாரணை நடத்தியது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சில ஊழியர்கள் உரிய கல்வித்தகுதியின்றி பணிபுரிகின்றனர். குறிப்பாக கோயிலில் மின் தொழில்நுட்ப பணியாளர் என்ற பதவியே கிடையாது. ஆனால் அந்த பதவியில் ஒருவர் பணியாற்றி வருகிறார். பொதுவாக அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் மின் பணியாளராக சேரும்போது 'பி' உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதை பணிபுரியும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு. ஆனால் அந்த உரிமம் இல்லாமல் ஊழியர் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, 'இதுவரை கோயில் நிர்வாகத்திடம் வழங்கவில்லை' என பதில் தரப்பட்டுள்ளது.குறைந்தபட்ச கல்வித்தகுதி, அனுபவத்தின் அடிப்படையிலும், தி.மு.க., அனுதாபி என்பதாலும் அந்த ஊழியரை அறங்காவலர்கள் குழு பணியில் சேர்த்துள்ளது. இதேபோல் பல ஊழியர்கள் போதிய கல்வித்தகுதியின்றி பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்தால் உண்மை தெரியவரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கோயில் துணை கமிஷனர் சூரியநாராயணனிடம் கேட்டபோது, 'இதுகுறித்து விசாரிக்கப்படும்' என்றார்.
06-Feb-2025