மாநகராட்சியில் அடுத்த பூதம் ; சொத்து வரியை அடுத்து இன்ஜினியரிங் பிரிவாலும் வருவாய் இழப்பு; பள்ளம் தோண்டிய தில்லுமுல்லுவில் அதிகாரிகள் - கவுன்சிலர் கூட்டு
மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புயல் அடங்குவதற்குள் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புக்காக பள்ளங்கள் தோண்டி குழாய்ப் பதிக்கும் பணிகளில் மீட்டர் அளவை குறைத்து காண்பித்து மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்திய வகையில், ரூ.பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தமிழக அளவில் புயலை கிளப்பியுள்ளது. மண்டல, நிலைக் குழு தலைவர்கள் பதவிகளை இழந்தனர். மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வழிகாட்டுதல்படி டி.ஐ.ஜி., தலைமையிலான குழு இந்த முறைகேடை விசாரிக்கிறது. இந்நிலையில், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் மற்றொரு பூதாகரமான சர்ச்சை பொறியியல் பிரிவில் எழுந்துள்ளது. தற்போது முல்லை பெரியாறு இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகிக்க 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் வரை இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் திட்டம் உள்ளது. இதுதவிர மாநகராட்சிகளில் விடுபட்ட வார்டுகளில் பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்கும் பணிகளும் நடக்கின்றன. வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்க, ரோடுகள் குறுக்கிடும் நிலையில் அதை தோண்டி குழாய்களை கொண்டு செல்ல வேண்டும். இதற்காக மண், தார், சிமென்ட், பேவர் பிளாக் வகை ரோடுகளை தோண்டி மீண்டும் மூடுவதற்கு மாநகராட்சிக்கு இணைப்புதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு பள்ளம் தோண்டும்போது அதன் அளவை குறைத்துக்காட்டி, அதற்கான கட்டணத்தை மட்டும் மாநகராட்சிக்கு செலுத்தும் வகையில் பல வார்டுகளில் கவுன்சிலர்கள் - பொறியாளர்கள் (ஏ.இ., ஜெ.இ.,க்கள், தொழில்நுட்ப பணியாளர்கள்) கூட்டணி அமைத்து செயல்படுவதாகவும், இதனால் ரூ.கோடிக் கணக்கில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது: குடிநீர் குழாய்கள் இணைப்பு பணிக்கு தோண்டும் ரோடுகளுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். 1 -3 மீட்டர் பள்ளம் தோண்ட வேண்டுமெனில் 4 மீட்டரும், 5 - 7 மீட்டர் பள்ளம் தோண்ட வேண்டுமெனில் 8 மீட்டர் என பள்ளம் தோண்ட வேண்டும் என்பதும் நடைமுறை. ஆனால் கவுன்சிலர்கள், பொறியாளர்கள், பிளம்பர்கள் கூட்டணியால் தோண்டிய பள்ளத்தின் அளவை குறைத்து காட்டி மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்தி வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றனர். அதேநேரம் சில பொறியாளர்கள் நேர்மையாக செயல்படுகின்றனர் என்பது ஆறுதலாக உள்ளது. சில வார்டுகளில் கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் இணைப்புதாரர்களே இரவோடு இரவாக பள்ளம் தோண்டி பாராமரிப்பு பணிகளை முடித்துக்கொள்கின்றனர். இதனாலும் மாநகராட்சிக்கான வருவாய் முடங்குகிறது. இதேபோல் பாதாளச் சாக்கடை இணைப்பை வீட்டில் இருந்து கழிவுகள் சேரும் தொட்டி வரை கொண்டு சென்று இணைக்க வேண்டும். ஆனால் இரண்டு தொட்டிகளுக்கு இடையே உள்ள குழாய்களில் இணைப்பு கொடுத்துவிட்டு பணியை முடிக்கின்றனர். இதற்காக அந்த கூட்டணிக்கு இணைப்புதார்களிடமிருந்து ரூ.ஆயிரக்கணக்கில் தொகை கைமாறுகிறது. இதுபோன்று மாநகராட்சி(க்கு)யில் 'பள்ளம் தோண்டும்' முறைகேடு பல ஆண்டுகளாக நடக்கிறது. இதற்கு கமிஷனர் சித்ரா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.