உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாமநத்தம் கண்மாயில் பறவைகள் எண்ணிக்கை குறைவு

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் எண்ணிக்கை குறைவு

மதுரை : ''மதுரை சாமநத்தம் கண்மாயில் கடந்தமுறை கணக்கெடுப்பின் போது இருந்ததை விட பறவைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாக'' மதுரை அமெரிக்கன்கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்தார்.சதுப்பு நில (ஈர நிலங்கள்) தினத்தை முன்னிட்டு இக்கல்லுாரி மாணவர்கள் சாமநத்தம் கண்மாயில் பறவைகளின் எண்ணிக்கை, செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பகவதி ஒருங்கிணைத்தார்.ராஜேஷ் கூறியதாவது: ஈரநிலங்கள் மனித வாழ்விற்கு முக்கியமானவை. அவை நீரின் தரத்தை மேம்படுத்தி மண்அரிப்பை கட்டுப்படுத்துகிறது. அச்சுறுத்தலுக்கு உள்ளான, அழிந்து வரும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு வாழ்விடமாக சதுப்பு நிலங்கள் உள்ளன. சாமநத்தம் கண்மாயில் கூழைக்கிடா, சாம்பல் நிற கொக்கு, மீன்கொத்தி, தகைவிலான், பாம்புத்தாரா, முக்குளிப்பான், செந்நாரை, மடையான், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, நெடுங்கால் உள்ளான் போன்ற 40க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வசிக்கின்றன. கடந்தாண்டு கணக்கெடுப்பில் இருந்த பறவையினங்கள்இப்போதும் பார்க்க முடிந்தாலும் அவற்றின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்து விட்டது.பறவையினங்கள் தொடர்ந்து நீந்தி கொண்டிருப்பதை விட அவ்வப்போது பறந்து கொண்டிருப்பதை விரும்பும். இக்கண்மாயில் மீன்பிடி வலைகள் பயன்படுத்தப்படுவதால் பறவைகளுக்கு தொந்தரவாக அமைகிறது. கரையோர மரங்கள் தான் புகலிடமாகவும் மறைவிடமாகவும் இருந்தது. தற்போது மரங்களிடையே இடைவெளி அதிகமாக உள்ளது. அதனால் கூடு கட்ட இடைஞ்சல் ஏற்பட்டு பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் அவனியாபுரம், சேமட்டான்குளம், வெள்ளக்கல் கண்மாய்களில் ஆகாயத்தாமரை அதிகளவு படர்ந்துள்ளது. இதன் மூலம் கழிவுநீர் அதிகமாக கலப்பது உறுதியாகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !