இறந்தவர் உடலை மயானத்தில் தார்ப்பாய் கட்டி எரிக்கும் அவலம்
அலங்காநல்லுார்: தனிச்சியம் செம்புக்குடிபட்டி ஆதிதிராவிடர் சமுதாய மயானத்தில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக இறந்தோர் உடலை தார்ப்பாய் பிடித்து எரிக்கும் அவலநிலை தொடர்கிறது. அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் செம்புக்குடிபட்டியில் 500 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பாசன ஓடைக்கரை, வண்டிப்பாதையை ஒட்டிய குறைந்தளவிலான இடத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இடமில்லாததால் புதைத்த உடல் மீது, மீண்டும் உடலை புதைக்கும் அவலம் உள்ளது. இறந்தோர் உடலை புதைக்க குழி தோண்டினால் எலும்புக்கூடுகள் வருகின்றன. மழை நேரத்தில் தார்ப்பாய் கட்டி உடலை எரிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் இவ்வூர் சோலைராஜன் கூறுகையில், ''எங்கள் காலனியை ஒட்டி 5 சென்ட் இடம் உள்ளதாக 4 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று வரை இடத்தை ஒதுக்கி தரவில்லை. நேற்று இறந்த நாகலட்சுமி என்பவர் உடலை எரிக்க ஷெட் இல்லாததால் மேற்புறம் தார்ப்பாய் கட்டி எரிக்க சிரமப்பட வேண்டியதாயிற்று. எனவே மயானத்திற்கு கூடுதல் இடம், அதற்கென பாதை, எரிமேடை, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றார்.