உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் தீர வழி இருக்கு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

மதுரை நகரின் போக்குவரத்து நெரிசல் தீர வழி இருக்கு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

மதுரை: மதுரையில் நெரிசலுக்கு தீர்வு காண போக்குவரத்துத் துறையினர் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.மாட்டுத்தாவணி பகுதியில் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், கீழவெளிவீதி, பெரியார் பஸ்ஸ்டாண்ட் என பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடத்தும் சாலை பாதுகாப்பு கூட்டங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர். அதில் சில மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது.போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மாட்டுத்தாவணியில் வேளாண் வணிகவளாகம், பூ, பழம், காய்கறி, மீன் சந்தைகள் உள்ளன. அப்பகுதியில் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் உள்ளன.விரைவில் டைடல் பார்க் வர உள்ளது. மெயின்ரோட்டில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் எளிதாக சென்று திரும்ப வழியில்லை.எனவே பஸ்ஸ்டாண்டுக்குள் பஸ்கள் செல்லும் வழியை பின்புறமாக அமைக்கலாம். மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு பின்புறமாக மேற்கு நோக்கி ரோடு அமைத்து ரிங் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டுக்குள் வர ஏற்பாடு செய்யலாம். இதனால் பஸ்ஸ்டாண்ட் முன்புறம் நெரிசல் குறையும்.அதேபோல ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டை நகருக்கு வெளியே சமயநல்லுார் பகுதிக்கு கொண்டு செல்லலாம். இதனால் நகருக்குள் நெரிசல் குறையும். ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டை தேனி பஸ்கள், டவுன் பஸ்களுக்கு பயன்படுத்தலாம்.நகருக்குள் ஆங்காங்கே 'மல்டி லெவல் பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். அவற்றின் இடவசதி குறித்து அறிய, நகரின் பல பகுதிகளில் 'கியூ.ஆர்.' கோடு அமைத்து பயணிகளை நகருக்குள் கட்டுப்படுத்தலாம். ஏற்கனவே இதை சித்திரைத்திருவிழாவின்போதும், சபரிமலை சீசன் போதும் போலீசார் பயன்படுத்தினர்.இதுபோன்ற 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் சென்னையில் உள்ள 'கும்டா' (சென்னை யுனிபைட் மெட்ரோபாலிடன் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி) என்ற அமைப்பிடமும் நகரின் வளர்ச்சிக்கான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mariraj R
ஜூன் 05, 2025 12:12

மதுரையில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. வட பகுதியை விட தென்பகுதியில் நெருக்கடி அதிகம். மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களை மாற்ற வேண்டும். முறையே யா . ஒத்தக்கடை பகுதிக்கும் சமயநல்லூர் பகுதிக்கும் மாற்ற வேண்டும். அப்போதுதான் நெருக்கடி தீரும்.


Karthikeyan Nk
ஜூன் 05, 2025 18:30

நிச்சயமாக நீங்கள் சொல்லும் பகுதிகளில் நெருக்கடி அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தான் வளர்ச்சி அடையும். மாநகர போக்குவரத்துக் கழகம், ஆட்டோ, டாக்ஸி கட்டணம் மேலும் அதிகரிக்கும். இல்லாத வளர்ச்சி இருப்பது போல் காட்டுவது தான் பேருந்து நிலைய இடமாற்றம். கொஞ்சம் விவசாய நிலங்களையும் பாருங்கள் சார்.


G VEERAMANIKANDAN
ஜூன் 05, 2025 10:57

மதுரையின் மைய பகுதிகளான மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மாசி, மார்ட், வெளி வீதிகளில் தான் அதிகமான நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஷேர் ஆட்டோக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்குவது மேலும் லாரி புக்கிங் அலுவலகங்களை புறநகர் பகுதிக்கு மாற்றுவது நெல்பேட்டை காய்கறி சந்தை சாலையின் பாதியை ஆக்கிரமிப்பு செயல்படுகிறது. வெங்காய சந்தை மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Rajah M E
ஜூன் 05, 2025 09:59

மிக அருமை


Karthikeyan Nk
ஜூன் 05, 2025 07:31

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் தேனி வழி தவிர அனைத்தும் மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட வேண்டும். வாடிப்பட்டியில் தொடங்கும் வெளி வட்ட சாலை மூலம் மாட்டுத்தாவணியை எளிதாக அணுகலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வண்டியூர் கண்மாயை அரசே ஆக்கிரமிக்காமல் இருக்கும் பேருந்து நிலையத்தில் மல்டி லெவல் பேருந்து நிலையத்தை கட்டலாம். இல்லையெனில் தற்போது இருக்கும் பார்க்கிங் பகுதியை மல்டி லெவல் பார்க்கிங்காக மாற்றி அங்கிருந்து கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் ஓசூர் பகுதிகளுக்கு இயக்கலாம். வெளியூர் பகுதி பேருந்துகளுக்கு பின்புறம் சாலை அமைப்பது மிகவும் நல்லது. பேருந்து நிலையத்திலேயே ஒரு ஒர்க் ஷாப் அமைப்பது முக்கியம். மாட்டுத்தாவணியை பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூர் பேருந்து நிலையம் போல் அமைத்தால் மிக சிறப்பு. பேருந்து நிலையம் இடம் மாற்றுவது தீர்வு அல்ல. பேருந்து நிலையத்திற்கு தகுந்தவாறு இருக்கும் இடத்தை பாலங்கள் அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்தலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை