| ADDED : நவ 11, 2025 03:56 AM
மதுரை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை அவசர கோலத்தில் செய்ய வேண்டியதில்லை'' என அமைச்சர் தியாகராஜன் கூறினார் மதுரையில் அவர் கூறியதாவது: தி.மு.க.,வின் தேர்தல் பணிக்காக தகவல் தொழில்நுட்ப குழுவை துவக்கி தரவுகளை பெற்றவன்நான். இன்று வாக்காளர் பட்டியலில் நகர்ப்பகுதியில் பிழைகள் அதிகம் உள்ளது. எனவே பட்டியலை சீர்திருத்தம் செய்ய வேண்டும். நம்நாட்டில் ஏற்கனவே பலமுறை திருத்தங்கள் நடந்துள்ளது. ஆனாலும் இம்முறை மூன்று, நான்கு காரணங்களால் திருத்தம் செய்வது குறித்து வேதனையடைகிறேன். தேர்தல் ஒரு சிலமாதத்தில் வர உள்ள நிலையில் இப்போது திருத்தத்திற்கு என்ன அவசரம். இப்பணியை செய்ய படிவங்களை முன்பே அச்சிட்டு, நுாறு சதவீதம் வாக்காளர்களிடம் வினியோகித்து, ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்தபின் அறிவிக்க வேண்டும். ஆனால் அறிவித்த பின் படிவம் அச்சிடுகிறீர்கள். பயிற்சிஅளிக்கிறீர்கள். கடந்த 20 ஆண்டுகளில் மக்கள்தொகை, தொகுதி வரையறை எல்லாமே மாறி உள்ளது. இதனால் பலருக்கு தானாக வாக்காளர் தகுதி கிடைத்துவிடாது. இப்பணிகளை 30 நாட்களுக்குள் முடிக்க முடியாது. படிவம், ஆட்கள், பயிற்சி எதுவுமே போதவில்லை. அவர்களால் எப்படி குறுகிய காலத்தில் இப்பணிகளை மேற்கொள்ள முடியும். ஒரு காலத்தில் தேர்தல் ஆணையத்தின் தகவலை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம். இப்போது அவர்களைத் தவிர வேறு யாரும் பதிவிறக்கம் செய்ய இயலாது. நியாயமாக செயல்படும் தேர்தல் ஆணையம் ஏன் தகவல்களை டிஜிட்டல் படுத்த சிரமப்பட வேண்டும். உங்கள் தகவல் நியாயமாக இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்ய தகவல்களை கொடுங்க. நீங்கள் ஒழித்து மறைத்து செய்வதால் உங்கள் மீது அச்சம் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.