குவியும் குப்பையால் குமட்டுது திருநகர்
திருநகர்: திருநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பை, அதனால் எழும் துர்நாற்றம் வீசி பொதுமக்களை பாடாய்படுத்துகிறது.திருநகரின் முக்கிய தெருக்களில் இரும்பு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இருந்தும் பல தெருக்களின் ஓரங்களில் குப்பை கொட்டப்படுகிறது. பல நாட்களாக அவை அகற்றப்படாததால் நிரம்பி வழிகின்றன. குப்பைத் தொட்டிகள் இல்லாத தெருக்களில் கண்டபடி குப்பை இறைந்து கிடக்கின்றன. கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், நடந்து செல்வோர் மூக்கை பொத்தியபடியே கடக்கின்றனர்.தெருக்களில் கிடக்கும் குப்பை காற்றில் பறந்து அப்பகுதி மக்களின் மேல் விழுகிறது. வீடுகளில் குப்பை எடுக்க 3 நாட்களுக்கு ஒரு முறையே வருகின்றனர். திருநகர் குப்பை பிரச்னைக்கு எப்போதுதான் தீர்வோ என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.கவுன்சிலர் சுவேதா கூறியதாவது: துாய்மை பணியாளர் வேலை நிறுத்தத்தால் கடந்த வாரம் குப்பை அகற்றப்படவில்லை. பின்பு அகற்ற முயன்றபோது குப்பை எடுக்கும் 2 வண்டிகளும் பழுதடைந்துவிட்டன. இந்த மண்டலத்தின் 21 வார்டுகளுக்கும் குப்பை தொட்டிகளை மாற்ற ஒரேஒரு பழுதடைந்த வாகனமே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனங்களை சீரமைக்கவும், கூடுதல் வாகனங்களை அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் கமிஷனரிடம் கேட்டுள்ளேன் என்றார்.