மதுரை செல்ல மூன்று பஸ்கள் மாறும் அவலம்
பேரையூர் : பேரையூரில் இருந்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேரடி அரசு பஸ் வசதி இல்லாததால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். பேரையூரில் இருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் 48 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு செல்ல 2 மணி நேரமாகிறது. இதில் 3 பஸ்கள் மாறிச் செல்லும் அவலம் வேறு. பேரையூரில் இருந்து டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் என 3 பஸ்கள் மாறி, மாறி ஏறித்தான் மதுரை செல்கின்றனர். இதனால் முதியோர், பெண்கள், குழந்தைகளுடன் செல்வோர் சோர்வடைந்து விடுகின்றனர். மதுரைக்கு செல்லும்போது கூட அதிக சிரமம் இருக்காது. மதுரையில் கடைகளுக்கு வருவோர் ஊர்திரும்ப லக்கேஜ்களுடன் செல்வோர் மனம் வெறுத்துப் போகின்றனர். பேரையூரில் இருந்து பெரியாருக்கு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.