திருவட்டாறு கோயில் நகைகள்; ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகளை ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ சேவா அறக்கட்டளை செயலாளர் தங்கப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்ப கலசங்கள் புராதானமானவை. பல கோடி ரூபாய் மதிப்பு மிக்கவை. கோயிலுக்கு 2022 ல் கும்பாபிேஷகம் நடந்தது. அப்போது கலசங்கள் மாற்றப்பட்டு வேறு கும்பங்கள் வைக்கப்பட்டன. பஞ்சலோகத்தாலான ஆழ்வார்கள், பரிவார தெய்வங்களின் விக்ரஹங்கள் கும்பாபிேஷகத்திற்கு முன் எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றை கும்பாபிேஷகத்தின்போது மீண்டும் நிறுவவில்லை. அவை தற்போது எங்குள்ளன விபரம் தெரியவில்லை.மூலவருக்கு சொந்தமான நகைகளை முழுமையாக ஆவணப்படுத்தவில்லை. அவற்றின் தரத்தை சோதித்து உறுதி செய்யவில்லை. பழைய கும்ப கலசங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பஞ்சலோக தங்க விக்ரஹகங்களை மீண்டும் நிறுவ வேண்டும்.மூலவரின் உடனுறை தெய்வமான தங்க சிவலிங்கத்தை கண்டறிந்து மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும். கோயிலின் தங்க அங்கி, வைர நகைகளின் எண்ணிக்கை, அளவு, தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். நகைகளை கடவுளுக்கு சாற்றி அலங்காரம் செய்ய அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையின்போது கோயில் தரப்பு: சிவலிங்கம் மதிப்பீடு செய்யப்பட்டது. எடை 6.700 கிலோ கிராம். 1992ல் திருடுபோன 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டு கோயில் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளது. 1995ல் திருடுபோன 3 கிலோ நகைகள் மீட்கப்பட்டு பத்மநாபபுரம் நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளது. அதை கோயில் வசம் ஒப்படைக்க அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று விசாரித்தது. 2023 ஜூனில் அப்போதைய அறநிலையத்துறை இணை கமிஷனராக இருந்த ரத்தினவேல் பாண்டியன் ஆஜரானார்.நீதிபதிகள்: கோயிலில் 1992ல் நகைககள் திருடுபோனது. அதற்கு முன் ஆவணங்கள்படி எவ்வளவு நகைகள் இருந்தன, சம்பவத்திற்கு பின் எவ்வளவு நகைகள் இருந்தன, திருடுபோனதில் மீட்கப்பட்ட நகைகள் எவ்வளவு என அறிக்கை தாக்கல் செய்ய இந்நீதிமன்றம் 2023 ஜூனில் உத்தரவிட்டது. ஓராண்டிற்கு மேல் ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். ரத்தினவேல் பாண்டியன் சில விளக்கங்கள் அளித்தார்.நீதிபதிகள்: இவ்விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அறநிலையத்துறையின் செயல்பாடு உள்ளது. அதன் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. கோயில் பாதுகாப்பு பெட்டகம், பத்மநாபபுரம் நீதிமன்றத்திலுள்ள நகைகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுகிறார். இதற்கு நகை மதிப்பீட்டாளரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருட்டு நடப்பதற்கு முன், பின் எவ்வளவு நகைகள் இருந்தன என்பது குறித்து நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு உதவி செய்ய அறநிலையத்துறை கமிஷனர் ஏற்பாடு செய்ய வேண்டும். நீதிபதி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.2023 ல் இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்தினவேல் பாண்டியன் நிறைவேற்றவில்லை. அவருக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.